பல கோடி ஊழல்: மத்திய பாதுகாப்பு அமைச்சக உயரதிகாரி கைது; சி.பி.ஐ. நடவடிக்கை

சர்மா, வினோத் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 23-ந்தேதி வரை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு உற்பத்தி துறையில் துணை திட்ட அதிகாரியாக பதவி வகிக்கும் லெப்டினன்ட் கர்னர் தீபக் குமார் சர்மா மற்றும் வினோத் குமார் என்ற தனி நபர் ஆகிய இருவரை லஞ்ச வழக்கில் சி.பி.ஐ. நேற்று கைது செய்துள்ளது.
அவர்கள் இருவரும் பாதுகாப்பு துறை தொடர்பாக லஞ்சம் மற்றும் சதி திட்டம் தீட்டுதல் வழக்கில் சேர்க்கப்பட்டு, கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சர்மா அடிக்கடி ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடும் வழக்கம் கொண்டவர். தனியார் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பதற்காக லஞ்சம் பெறுவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்கிறார் என சி.பி.ஐ. தெரிவித்து உள்ளது.
சர்மாவின் மனைவி கர்னல் காஜல் பாலியும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். அவர் ராஜஸ்தானில் பீரங்கி பிரிவில் உயரதிகாரியாக உள்ளார். இதில் ராஜீவ் யாதவ் மற்றும் ரவ்ஜித் சிங் ஆகிய இருவரின் நிறுவனங்களுக்கு தேவையான விசயங்களை செய்து கொடுத்துள்ளனர்.
இதற்காக சர்மாவுக்கு வினோத் ரூ.3 லட்சம் பணம் டுத்திருக்கிறார். சர்மாவின் டெல்லியில் உள்ள வீட்டில் நடந்த சோதனையில் ரூ.2.23 கோடியும், காஜல் வீட்டில் இருந்து ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
டெல்லி, ஸ்ரீ கங்கா நகர், பெங்களூரு மற்றும் ஜம்முவில் சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன. டெல்லியிலும் சோதனை நடத்தப்பட்டு உள்ளது. சர்மா, வினோத் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 23-ந்தேதி வரை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.






