

மும்பை,
மும்பையில் கடந்த 2006-ம் ஆண்டு மின்சார ரெயில்களில் தொடர்ச்சியாக வெடிகுண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 190 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.உலகை உலுக்கிய இந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக மராட்டிய பயங்கரவாத தடுப்பு படையினர் விசாரணை நடத்தி 12 பேரை கைது செய்தனர். மேலும் மோக்கா சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது. இதில் குற்றம் சுமத்தப்பட்ட 5 பேருக்கு தூக்கு தண்டனையும், 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
இதில் ஆயுள் தண்டனை பெற்ற முகமது சாஜித் அன்சாரி என்பவர் தனது தண்டனையை ரத்து செய்யக்கோரி மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை நிறைவில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது குற்றவாளி முகமது சாஜித் அன்சாரிக்கு சிறப்பு கோர்ட்டு விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது.