மும்பையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து பயங்கர விபத்து: பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு

மும்பையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
மும்பையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து பயங்கர விபத்து: பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு
Published on

மும்பை,

மும்பை காட்கோபர் மேற்கில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி மார்க் தாமோதர் பார்க் பகுதியில் சாய் தர்ஷன் என்ற 4 மாடி கட்டிடம் இருந்தது. 30 ஆண்டுகள் பழமையான இந்த கட்டிடத்தில் 15 குடும்பத்தினர் வசித்து வந்தனர். கட்டிடத்தின் தரை தளத்தில் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக சீரமைப்பு பணி நடந்து வந்தது.

இதன் காரணமாக அங்கு மருத்துவ பணிகள் ஏதும் நடைபெறவில்லை. மருத்துவமனை காலியாக இருந்தது.இந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக நேற்று காலை அந்த துரதிருஷ்ட சம்பவம் நடந்து விட்டது. உயர்ந்து நின்ற அந்த கட்டிடம் காலை 10.30 மணி அளவில் திடீரென ஆட்டம் கண்டது. அடுத்த சில நொடிகளில் அந்த கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது.கட்டிடத்தின் மாடிகள் சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடந்தது. வீடுகளில் இருந்த குடியிருப்புவாசிகள் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர்.

கட்டிடம் இடிந்த போது ஏற்பட்ட பயங்கர சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் பதறி அடித்து கொண்டு வந்து பார்த்தனர். அப்போது கட்டிடம் தரைமட்டமாகி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர். கட்டிட விபத்து பற்றி தீயணைப்பு படையினர் மற்றும் மாநகராட்சி மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் 14 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர். இதேபோல் மாநகராட்சி மீட்பு குழுவினரும், தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் அங்கு விரைந்தனர்.அவர்கள் இடிபாடுகளை அப்புறப்படுத்தி உள்ளே சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். பொதுமக்களும் மீட்பு பணியில் அவர்களுக்கு உதவியாக செயல்பட்டனர். பொக்லைன் எந்திரங்கள் மூலம் இடிபாடுகள் அகற்றும் பணி நடந்தது. இந்த கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.

கட்டிடத்தின் தரைப்பகுதியில் சிவசேனா கட்சி பிரமுகர் மேற்கொண்ட சீரமைப்பு பணிகளால் கட்டிடம் உறுதித்தன்மை இழந்துவிட்டதாக தகவல் வெளியானதையடுத்து இது குறித்து விசாரணை நடத்த முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com