

மத்திய ரெயில்வே விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-புனே ரெயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரங்கள், தண்டவாள பராமரிப்பு பணி மற்றும் உயர்மின் அழுத்த கம்பி சீரமைக்கும் பணிகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக புனே ரெயில் நிலையத்தில் உள்ள 3, 4, 5 மற்றும் 6 ஆகிய பிளாட்பாரங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு இருக்கும்.எனவே புனே வழியாக இயக்கப்படும் சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டும், சில ரெயில்கள் தாமதமாகவும், மாற்று ரெயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டும் இயக்கப்பட உள்ளன. குறிப்பாக, மும்பை-புனே இடையே இயக்கப்படும் 6 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும் மும்பை- சென்னை எக்ஸ்பிரஸ் (வண்டி எண்:- 22159) புனே ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு 40 நிமிடங்கள் தாமதமாக இயக்கப் படும். ஜெய்ப்பூர்- புனே எக்ஸ்பிரஸ் ரெயில் காட்கி ரெயில் நிலையத்து டன் நிறுத்தப்படும். நாக்பூர்- புனே, அமராவதி- புனே, ஜம்முதாவி- புனே எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஹடப்சர் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். லோனாவாலா- புனே பாசஞ்சர் ரெயில் சிவாஜிநகர் நிலையத்துடன் நிறுத்தப்படும். அதேபோல மறுமார்க்கத்தில் இயக்கப்படும் ரெயில்களின் புறப்படும் நிலையங்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, புனே- ஜெய்ப்பூர், புனே- மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் புனேக்கு பதிலாக காட்கி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும். புனே- நாக்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஹடப்சர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும். புனே-கோலாப்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சத்தாரா ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும். எனவே, பயணிகள் இந்த ரெயில் சேவை மாற்றங்களை முன்கூட்டியே அறிந்து, தங்களது பயண நேரத்தை திட்டமிட்டு மாற்றி அமைத்துக்கொள்ளுங்கள்.என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.