குல்பூஷண் ஜாதவ் வழக்கில் தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு; நண்பர்கள் உற்சாக கொண்டாட்டம்

குல்பூஷண் ஜாதவ் வழக்கில் தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட தகவல் அறிந்து நண்பர்கள் உற்சாகமுடன் கொண்டாடி வருகின்றனர்.
குல்பூஷண் ஜாதவ் வழக்கில் தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு; நண்பர்கள் உற்சாக கொண்டாட்டம்
Published on

இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றியவர் குல்பூஷண் ஜாதவ். இவர், கடந்த 2017ம் ஆண்டு மார்ச் மாதம் 3ந்தேதி பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கைது செய்யப்பட்டார். இந்தியாவின் ரா அமைப்பிற்கு உளவு பார்ப்பதற்காக ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியதாகவும், பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதாகவும் பாகிஸ்தான் அரசாங்கம் அவர் மீது குற்றம் சாட்டியது.

இது தொடர்பான வழக்கில் குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு மரண தண்டனை விதித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இந்திய அரசு நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் ஐ.நா. அமைப்பின்கீழ் செயல்பட்டு வரும் சர்வதேச கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

குல்பூஷண் ஜாதவ் வழக்கில் தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது என சர்வதேச நீதிமன்ற நீதிபதி அப்துல்காவி அஹமது யூசுப் அறிவித்துள்ளார். 15க்கு 1 என்ற வாக்குகள் அளவில் இந்தியாவுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

குல்பூஷண் ஜாதவ் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை. அதனால் குற்றச்சாட்டு மற்றும் தண்டனையை மறுபரிசீலனை செய்யவும் பாகிஸ்தானுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சர்வதேச நீதிமன்ற தீர்ப்புக்கு, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் முன்னாள் வெளிவிவகார துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது இந்தியாவுக்கு கிடைத்த மிக பெரிய வெற்றி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என சிங் கூறியுள்ளார்.

குல்பூஷண் ஜாதவ் வழக்கில் தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள தகவல் அறிந்து நண்பர்கள் அதனை உற்சாகமுடன் கொண்டாடி வருகின்றனர். குல்பூஷண் ஜாதவின் நண்பர்கள் அவரது சொந்த ஊரில் பலூன்களை பறக்க விட்டும், இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியை கொண்டாடினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com