மும்பை மருத்துவமனை தீ விபத்து; 10 பேரின் உயிரை காப்பாற்றிய உணவு விநியோகிக்கும் வாலிபர்

மும்பை மருத்துவமனை தீ விபத்தில் இருந்து உணவு விநியோகிக்கும் வாலிபர் 10 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளார்.
மும்பை மருத்துவமனை தீ விபத்து; 10 பேரின் உயிரை காப்பாற்றிய உணவு விநியோகிக்கும் வாலிபர்
Published on

மும்பை,

மும்பையின் காம்கர் மாநில தொழிலாளர் காப்பீட்டு கழக மருத்துவமனையின் மேல் தளங்களில் கடந்த திங்கட்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு உடனடியாக சென்று தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் அந்த வழியே சென்ற தனியார் நிறுவன உணவு விநியோகிக்கும் வாலிபரான சித்து ஹியூமனாபேட் நோயாளிகளின் அலறல் சத்தம் கேட்டு தனது பைக்கை நிறுத்தியுள்ளார்.

அதன்பின் தீயணைப்பு வீரர்களிடம் சென்று மீட்பு பணியில் ஈடுபட அனுமதி கேட்டு உள்ளார். அதிகாரிகள் அளித்த ஒப்புதலை அடுத்து உடனடியாக தீயணைப்பு நிலைய ஏணியின் உதவியுடன் 4வது தளத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு தீயால் அறை முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்திருந்தது. எனினும், தைரியமுடன் அங்கிருந்த நோயாளிகள் மற்றும் அவர்களை சந்திக்க வந்தவர்கள் என 10 பேரை மீட்டு காப்பாற்றியுள்ளார். தொடர்ந்து 2 மணிநேரம் போராடி மீட்பு பணியில் ஈடுபட்ட சித்து புகையால் பாதிக்கப்பட்டார்.

அவர் அருகிலுள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறார். 12வது வகுப்பு படித்து விட்டு உணவு விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபடி கூறும்பொழுது, உதவி கோரி மக்கள் அழும் சத்தம் கேட்டது. இதனால் தீயணைப்பு வீரர்கள் அனுமதியுடன் உடனே மீட்பு பணியில் இறங்கினேன். அவர்கள் உதவியுடன் கட்டிடத்தின் 4வது தளத்திற்கு சென்று கண்ணாடியை உடைத்து உள்ளே சென்றேன்.

அங்கிருந்த நோயாளிகளை ஒருவர் பின் ஒருவராக ஜன்னல் வழியே கீழே இறங்க செய்தேன். பெண் நோயாளி ஒருவர் எனது கையில் இருந்து நழுவினார். ஆனால் அதிர்ஷ்டவச முறையில் அவர் தப்பி விட்டார் என கூறினார்.

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை இணை மந்திரி கேங்வார் என்னை சந்தித்து உடல்நலம் பற்றி கேட்டறிந்து சென்றார் என்றும் சித்து கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com