குடிமகன்கள் வாழ பாதுகாப்பற்ற நகரம் மும்பை; முன்னாள் முதல் மந்திரியின் மனைவி டுவிட்டர் பதிவு

மராட்டிய முன்னாள் முதல் மந்திரியின் மனைவி அம்ருதா பட்னாவிஸ், குடிமகன்கள் வாழ பாதுகாப்பற்ற நகரம் மும்பை என டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.
குடிமகன்கள் வாழ பாதுகாப்பற்ற நகரம் மும்பை; முன்னாள் முதல் மந்திரியின் மனைவி டுவிட்டர் பதிவு
Published on

புனே,

இந்தி திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக அறியப்பட்ட நடிகர் சுஷாந்த் சிங் (வயது 34), கடந்த ஜூன் மாதம் 14ந்தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தொழில் போட்டி காரணமாக ஏற்பட்ட மனஅழுத்தத்தால் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே சுஷாந்த் சிங்கின் தந்தை அளித்த புகாரின்பேரில் தற்கொலைக்கு தூண்டுதல், திருட்டு, மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் நடிகை ரியா சக்கரபோர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட 6 பேர் மீது பாட்னா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நடிகை ரியா சக்கரபோர்த்தி, சுஷாந்த் சிங் காதலி ஆவார். எனினும், இந்த குற்றச்சாட்டுகளை ரியா மறுத்துள்ளார்.

இதுவரை இந்த வழக்கில் பெரிய முன்னேற்றம் ஏதும் ஏற்படாத நிலையில், சுஷாந்த் சிங் மரண வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க பீகார் அரசு பரிந்துரை செய்துள்ளது. இந்நிலையில், மராட்டிய முன்னாள் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் இந்த வழக்கு கையாளப்படும் விதம் பற்றி டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கை மும்பை பெருநகர போலீசார் கையாளும் முறையை கவனிக்கும்பொழுது, மும்பை அதன் மனித தன்மையை இழந்து விட்டது. ஒன்றுமறியாத அப்பாவி மற்றும் சுயமரியாதை உடைய குடிமகன்கள் வாழ்வதற்கு பாதுகாப்பற்ற நகராகி விட்டது என நான் உணர்கிறேன் என தெரிவித்து உள்ளார்.

இதற்கு பதிலடி தரும் வகையில், ஆளும் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்கள், இதுவரை அம்ருதாவை பாதுகாத்து வந்த அதே போலீசாரை பற்றி அவர் விமர்சனம் செய்கிறார் என்று கூறியுள்ளனர்.

சிவசேனாவின் மேலவை எம்.பி.யான பிரியங்கா சதுர்வேதி, முன்னாள் முதல் மந்திரியின் மனைவியாக இருந்து கொண்டு, இதுபோன்று பேசுவது வெட்கப்பட வேண்டிய விஷயம் என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com