

மும்பை,
நாட்டின் நிதி தலைநகரமான மும்பையில் 10 ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அரங்கேற்றிய அதிபயங்கர தாக்குதலை நினைத்தால் இன்றும் அனைவரது இருதயமும் பதறும். 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி லஸ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் மும்பைக்கு கடல் மார்க்கமாக ஊடுருவி தாக்குதல் நடத்தினார்கள். மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில்நிலையம், லியோபோல்டு கபே, ஒபேராய் டிரைடெண்ட், தாஜ் ஓட்டல், காமா ஆஸ்பத்திரி, நரிமன்ஹவுஸ் உள்ளிட்ட பகுதிகளில் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.
கண்ணில்பட்டவர்களை எல்லாம் துப்பாக்கி குண்டுகளால் குருவிகளை போல சுட்டுத்தள்ளினர். உலகையே உலுக்கிய இந்த கொடூர தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள், வெளிநாட்டினர், பயங்கரவாதிகளை எதிர்த்து சண்டையிட்ட போலீசார் என 166 பேர் கொல்லப்பட்டனர். 308 பேர் படுகாயம் அடைந்தனர். ரோடுகளில் மக்கள் குண்டு அடிபட்டு கிடந்ததையும், சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையமே ரத்த வெள்ளத்தில் மிதந்ததையும், உறவுகளை பறிகொடுத்தவர்களின் கதறல்களையும் அவ்வளவு எளிதாக யாரும் மறந்துவிட முடியாது.
அந்த கொடூர தாக்குதல் நடந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து அதன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. அந்த பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த போலீஸ் அதிகாரிகளின் நினைவிடம் மெரின்டிரைவ் போலீஸ் ஜிம்கானாவில் உள்ளது. அங்கு மராட்டிய கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் மலர்வளையம் வைத்து உயிர்த்தியாகம் செய்த போலீஸ் அதிகாரிகளுக்கு மரியாதை செலுத்தினார்கள்.