

புதுடெல்லி,
டெல்லியில் போராடிக்கொண்டிருக்கும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை சேர்ந்த இளைஞர்களுக்காக மும்பையை சேர்ந்த நபர் ஒருவர் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்துள்ளார்.
நீட் தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) சார்பில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களின் பசியை போக்க மும்பையை சேர்ந்த நபர் ஒருவர் செய்த நெகிழ்ச்சியான காரியம் வைரலாகி வருகிறது.
டெல்லியில் நேற்று பெய்த கனமழையையும் பொருட்படுத்தாமல், தனியார் உணவு விநியோக ஊழியர் ஒருவர் கையில் பெரிய உணவு பைகளுடன் போராட்டக்களத்திற்கு வந்துள்ளார். மும்பையை சேர்ந்த நபர் ஒருவர் ஆன்லைன் மூலம் இந்த உணவுகளை ஆர்டர் செய்து பணத்தையும் செலுத்தியுள்ளார்.
டெல்லியில் பசியோடு போராடி கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் இந்த உணவை இலவசமாக வழங்கிவிடுங்கள்" என்று அந்த மும்பை நபர் தன்னிடம் போனில் தெரிவித்ததாக டெலிவரி ஊழியர் வீடியோ ஒன்றில் உருக்கமாக கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் இணையவாசிகளின் பெரும் பாராட்டுகளை பெற்று வைரலாகி வருகிறது. நாடெங்கிலும் இருந்து போராட்டக்காரர்களுக்கு ஆன்லைன் மூலம் பலரும் உணவு ஆர்டர் செய்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.