வரும் 1-ந் தேதி முதல்..மும்பையில் கார்களில் பின் இருக்கையில் பயணிப்பவர்களுக்கும் 'சீட் பெல்ட்' கட்டாயம்

மும்பையில் வருகிற 1-ந் தேதி முதல் கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களில் பயணிகளுக்கும் 'சீட் பெல்ட்' கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வரும் 1-ந் தேதி முதல்..மும்பையில் கார்களில் பின் இருக்கையில் பயணிப்பவர்களுக்கும் 'சீட் பெல்ட்' கட்டாயம்
Published on

மும்பை,

மும்பை அருகே உள்ள பால்கரில் கடந்த மாதம் நடந்த சாலை விபத்தில் டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி பலியானார். விபத்தில் காரின் முன் சீட்டில் இருந்த 2 பேரும் உயிர் தப்பினர். ஆனால் பின் சீட்டில் இருந்த சைரஸ் மிஸ்திரி மற்றும் அவரது நண்பர் பரிதாபமாக உயிரிழந்தனர். போலீசார் நடத்தி விசாரணையில் சைரஸ் மிஸ்திரி 'சீட் பெல்ட்' அணியாமல் இருந்ததால் தான், விபத்தின் போது காரின் முன்பகுதியில் மோதி உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து 4 சக்கர வாகனங்களில் பின்னால் இருப்பவர்களும் 'சீட் பெல்ட்' அணிய வேண்டும் என்ற கருத்துக்கள் எழுந்தன.

இந்தநிலையில் மும்பையில் 4 சக்கர வாகனங்களில் டிரைவர் மட்டுமின்றி பயணிகளும் 'சீட் பெல்ட்' அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வருகிற 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதுதொடர்பாக மும்பை போலீசார் பிறப்பித்து உள்ள உத்தரவில்:- அனைத்து வாகனங்களிலும் பயணிகளுக்கும் 'சீட் பெல்ட்' வசதியை ஏற்படுத்த அடுத்த மாதம் 1-ந் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்படுகிறது. அதன்பிறகு மும்பையில் 4 சக்கர வாகனங்களில் டிரைவர் மட்டுமின்றி பயணிகளும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும். 'சீட் பெல்ட்' அணியாதவர்கள் மீது மோட்டார் வாகன சட்டம் 194 (பி) (1) பிரிவின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com