

மும்பை,
நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதித்த மாநிலமாக உள்ள மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இன்று அம்மாநிலத்தில் 28 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
மாநில தலைநகர் மும்பையில் 953 பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பையில் 10 வாரங்களுக்குப் பிறகு ஒருநாள் கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் சரிந்துள்ளது. எனினும், ஏப்ரல் மாதத்தை ஒப்பிடும் போது பரிசோதனையும் கணிசமாக குறைந்துள்ளது.
மும்பையில் இன்று 44 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பு விகிதம் 5.31 சதவிகிதமாக உள்ளது. அதேபோல், குணம் அடைவோர் விகிதம் 93 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த மாதத்தில் தினசரி 50 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது சராசரியாக 20,000-25,000- பரிசோதனைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனினும், புனே மற்றும் நாசிக் நகரில் கொரோனா பாதிப்பு அதிகமாகவே காணப்படுகிறது. புனேவில் இன்று 3,795- பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. நாசிக்கில் 2,246- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.