

மும்பை,
வங்க கடலில் கன்னியாகுமாரி அருகே நிலை கொண்டிருந்த ஓகி புயல் காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்தது. ஓகி புயலின் தாக்கத்தால் கன்னியாகுமரியை கனமழை புரட்டி போட்டது. ஓகி புயல் தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து அரபிக்கடலில் உள்ள லட்சத்தீவை நோக்கி சென்றது.
இதனால், தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு புயல் ஆபத்து நீங்கியது. லட்சத்தீவில் கோர தாண்டவம் ஆடிய இந்த புயல், வடமேற்காக நகர்ந்து, தீவிரமடைந்து குஜராத் நோக்கி திரும்பி உள்ளது.
இதனால் வடமராட்டியம் மற்றும் தென்குஜராத் பகுதிகளில் 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என மும்பை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக மும்பையில் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மும்பை, தானே, சிந்துதுர்க், ராய்காட், ரத்னகிரி பால்கர், ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.