ஜே.என்.யூ மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டம்

ஜே.என்.யூ மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து மும்பை உள்பட பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜே.என்.யூ மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டம்
Published on

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக வளாகத்தில் நேற்று ஆசிரியர் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. அப்போது முகத்தை துணியால் மறைத்தபடி கம்புகள், இரும்பு கம்பிகளுடன் நுழைந்த ஒரு கும்பல் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த மாணவர்களை பயங்கரமாக தாக்கியது. அவர்கள் பா.ஜனதாவின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.யை சேர்ந்த மாணவர்கள் என்று கூறப்படுகிறது.

இதனால் இரு தரப்புக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. மாணவர்கள் ஒருவரையொருவர் பயங்கரமாக தாக்கிக்கொண்டனர். மேலும் ஏ.பி.வி.பி. மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து விடுதிக்குள்ளும் நுழைந்து சூறையாடினர்.

இதைத்தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகம் போலீசாருக்கு தகவல் கொடுத்தது. அதன்பேரில் வந்த போலீசார் மாணவர்களின் மோதலை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஏ.பி.வி.பி. மாணவர்கள் தாக்கியதில் பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் ஐஸ் கோஷ் உள்பட பலருக்கு மண்டை உடைந்தது. இதைப்போல மாணவர் சங்கத்தினர் தாக்கியதில் தங்கள் இயக்கத்தை சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக ஏ.பி.வி.பி. அமைப்பினர் தெரிவித்தனர். இந்த மோதல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முதல்-மந்திரி கெஜ்ரிவால், முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் ஆகியோர் கடும் அதிர்ச்சியும், கண்டனமும் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், பல்கலைக்கழக மோதலையடுத்து, டெல்லி காவல்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்ட 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள், போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து, மோதலை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். ஜாமியா மில்லியா, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயிலும் மாணவர்கள் திரண்டு இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

அதேபோல், புனேவில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இன்ஸ்டிடியூட்டில் பயிலும் மாணவர்கள், டெல்லியில் நடந்த தாக்குதலை கண்டித்து போராட்டம் நடத்தினர். அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மும்பையில், பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் கேட்வே ஆப் இந்தியா முன் திரண்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com