

திருவனந்தபுரம்
கேரளாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளது.அங்கு பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் சில மாவட்டங்கள் கடும் பாதிப்படைந்து உள்ளது.
கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் தற்போது கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது.மாநிலத்தின் முக்கிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதுடன், மலைப்பிரதேசங்களில் நிலச்சரிவு மற்றும் பெருவெள்ள அபாயம் உலுக்கியுள்ளது.
கேரளாவின் இடுக்கி, மலப்புரம் மற்றும் வயநாடு பகுதிகளில் வரும் 11ந்தேதி வரை தீவிர கனமழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் ஆபத்து நிலையை குறிப்பிடும் சிவப்பு வண்ண எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
இந்த நிலையில், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் ராஜமாலா பகுதியில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.
ராஜமலை பெட்டிமுடியில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டதில் சுமார் 30 குடும்பங்கள் சிக்கித் தவிப்பதாக கூறப்படுகிறது. பெட்டிமுடியில் தோட்டத் தொழிலாளர்கள் வசித்து வந்த லேம்களில் மண் சரிவு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மண்ணுக்குள் புதையுண்டவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.மீட்பு நடவடிக்கைகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.இதுவரை மீட்கப்பட்டவர்களை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மொத்தமாக 5 சமூக இல்லங்கள் நிலச்சரிவில் சிக்கியதாக கூறப்படுகிறது. இதில் சுமார் 85 பேர் வசித்து வந்துள்ளனர்.இவர்கள் மொத்தமாக மண்ணுக்கடியில் புதைந்துள்ளதாக உள்ளூர் மக்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
சிக்கியவர்களில் 10 பேர் உயிரிழந்து உள்ளனர். இதுவரை 16 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். 52 பேரை காணவில்லை. இதனால் உயிரிழப்பு அதிகமாகும் என அஞ்சப்படுகிறது.
கேரளா முழுவதும் ஆகஸ்டு 9 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.