

புதுடெல்லி.
தலைநகர் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மூன்று கொலைகள் நடந்துள்ளன. இதை தொடர்ந்து டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி காவல்துறை க்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.
சனிக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு சகோதரிகள் கொல்லப்பட்டனர். இரண்டாவது சம்பவம் டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்தில் நடந்துள்ளது. இதில், கத்திக்குத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.
டெல்லியின் ஆர்.கே.புரம் அம்பேத்கர் பஸ்தியில்,சனிக்கிழமை இரவில் பிங்கி(30) ஜோதி(29) சகோதரிகள் துப்பாக்கியால் சுட்டு கொல்லபட்டனர். பணத்தகராறில் இரண்டு சகோதரிகள் கொல்லபட்டதாக கூறப்படுகிறது. சகோதரரான லலித் மற்றும் சகோதரிகளுக்கு இடையேயான கொடுக்கல் வாங்கல் தகராறு தொடர்பாக கொலை நடந்து உள்ளது.
இந்த கொலை வழக்கில் அருண் மற்றும் மைக்கேல் உள்பட 3 குற்றவாளிகளை போலீசார் கைது செய்து உள்ளனர்.
இந்த கொலை வழக்கு குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, டெல்லி மக்கள் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். கவர்னர் அதிகாரத்தின் கீழ் இல்லாமல் ஆம் ஆத்மி ஆட்சியில் டெல்லியின் சட்டம் ஒழுங்கு இருந்திருந்தால், டெல்லி பாதுகாப்பாக இருந்திருக்கும் என கூறி உள்ளார்.
இது தனிப்பட்ட விரோதத்தின் விளைவு என்று மத்திய மந்திரி மீனாட்சி லேகி கூறி உள்ளார்.
டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்தில் உள்ள ஆர்யபட்டா கல்லூரியில் இரு மாணவர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் நிகில் சவுகான் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்.
உயிரிழந்த நிகில் சவுகானின் காதலி கடந்த 7 நாட்களுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதனை தட்டிகேட்ட மாணவரை ஒரு கும்பல் தாக்கி கத்தியால் குத்தி கொலை செய்து உள்ளது. இது தொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்து உள்ளனர்.