

கொள்ளேகால்
எலந்தூர் அருகே ஆசைக்கு இணங்க மறுத்த இளம்பெண்ணை கடத்தி கொல்ல முயன்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
ஆசைக்கு இணங்க மறுப்பு
சாம்ராஜ்நகர் மாவட்டம் எலந்தூர் தாலுகா இரிஷாவாடி பகுதியில் ஓடும் ஏரிக்கரையில் நேற்றுமுன்தினம் இளம்பெண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் தண்ணீர் தெளித்து பெண்ணை எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த எலந்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.
அதில் இரிஷாவாடி பகுதியில் இளம்பெண் தனியாக நின்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் இளம்பெண்ணை கண்டதும் அருகே வந்து நின்றுள்ளார். பின்னர் ரூ.500 கொடுத்து உல்லாசத்திற்கு வரும்படி தொடர்ந்து அழைத்துள்ளார். ஆனால் அதற்கு இளம்பெண் மறுத்துள்ளார்.
கொலை முயற்சி
இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர், இளம் பெண்ணை வலுகட்டாயமாக ஏரிக்கரைக்கு கடத்தி சென்று நீரில் மூழ்கடித்து கொலை செய்ய முயன்றுள்ளார். இதனால் அவரிடம் இருந்து தப்பிக்க பெண் கூச்சலிட்டு மயங்கி விழுந்துள்ளார். இந்த சத்தம் கேட்டு அப்பகுதியினர் ஓடிவந்துள்ளனர். இதையறிந்த வாலிபர், மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகிவிட்டார்.
இதையடுத்து போலீசார், இளம்பெண்ணை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். மேலும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட வாலிபரை வலைவீசி தேடிவருகின்றனர்.