

மண்டியா:
மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா நெட்கல் கிராமத்தை சேர்ந்தவர் சித்தேகவுடா. விவசாயி. இவருடைய மனைவி மகாதேவம்மா. இவர்களது மகன் சித்தராஜ். இந்த நிலையில், சித்தேகவுடா மற்றும் அவரது மனைவி மகாதேவம்மா இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதேபோல் நேற்று முன்தினமும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சித்தேகவுடா, வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து வந்து, மகாதேவம்மா மற்றும் சித்தராஜ் மீது ஊற்றி தீவைத்தார். இதனால் அவர்கள் 2 பேரும் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தனர்.
இதையடுத்து சித்தேகவுடா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த நிலையில் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். அப்போது, மகாதேவம்மா மற்றும் சித்தராஜ் தீயில் எரிந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், தீயை அணைத்து 2 பேரையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து பெலக்கவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சித்தேகவுடாவ கைது சய்தனர். மேலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.