விடுதி சமையல்காரர் கத்தியால் குத்தி கொலை

பெங்களூருவில் விடுதி சமையல்காரர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.
விடுதி சமையல்காரர் கத்தியால் குத்தி கொலை
Published on

ராஜாஜிநகர்:

உத்தர கன்னடா மாவட்டம் ஒன்னாவர் தாலுகா, ஹெப்பரானகெரே பகுதியை சேர்ந்தவர் ரவி பண்டாரி(வயது 44). இவர் பெங்களூரு ராஜாஜிநகர் 5-வது பிளாக் பகுதியில் தங்கி தனது உறவினருக்கு சொந்தமான தங்கும் விடுதியில் சமையல்காரராக வேலை பார்த்து வந்தார். இந்த விடுதியில் ஒரு பெண்ணும் சமையல் உதவியாளராக வேலை செய்து வருகிறார். அவரது மகன் ராகுல். நேற்று முன்தினம் ராகுல், ரவி பண்டாரியை 6-வது பிளாக்கில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

அதன்பின் ரவி பண்டாரி விடுதிக்கு திரும்பவில்லை. இதையடுத்து கணபதி, ரவியை தேடி ராகுல் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் கதவுகள் பூட்டி கிடந்தது. கதவை திறந்து பார்த்தபோது ரவி பண்டாரி ரத்த காயங்களுடன் வீட்டில் உயிரிழந்து கிடந்தார். இதுபற்றி அவர் மாகடி ரோடு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் ரவி பண்டாரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் ரவி பண்டாரி, தன்னுடன் வேலை செய்யும் பெண் உதவியாளருடன் தொடர்ந்து பேசி வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அறிந்த அந்த பெண்ணின் மகன் ராகுல் தனது தாயுடன், ரவி பண்டாரிக்கு கள்ளத்தொடர்பு இருக்கலாம் என சந்தேகித்துள்ளார்.இதன்காரணமாக அவர் ரவி பண்டாரியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது போலீசாருக்கு தெரிந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ராகுலை வலைவீசி தேடிவருகிறார்கள். 

X

Daily Thanthi
www.dailythanthi.com