தொழிலாளி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்; காதலனுடன், மனைவி கைது

பெங்களூருவில், தொழிலாளி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, அவரது மனைவி, கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் அவரை இருவரும் சேர்ந்து கொன்றுள்ளனர்.
தொழிலாளி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்; காதலனுடன், மனைவி கைது
Published on

பெங்களூரு:

பெங்களூருவில், தொழிலாளி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, அவரது மனைவி, கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் அவரை இருவரும் சேர்ந்து கொன்றுள்ளனர்.

கள்ளக்காதலன், மனைவி கைது

பெங்களூரு காடுகோடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் ஆனந்த், தொழிலாளி. இவரது மனைவி அனிதா. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டின் குளியலறையில் கத்தியால் கையை அறுத்து கொண்ட நிலையில் ஆனந்த் பிணமாக கிடந்தார். தனது கணவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரிடமும், குடும்பத்தினரிடம் அனிதா கூறி இருந்தார். அதன்படி, காடுகோடி போலீசாரும் தற்கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் ஆனந்த் தற்கொலை செய்யவில்லை என்றும், அவரை கொலை செய்திருப்பதும் தெரிந்தது. கள்ளத்தொடர்பு விவகாரத்தில் தனது கணவரை, கள்ளக்காதலன் ஹரீசுடன் சேர்ந்து அனிதாவே கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அனிதா, ஹரீஷ் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

உணவில் தூக்க மாத்திரை

அதாவது ஆனந்தை திருமணம் செய்த பின்பு அனிதாவுக்கு ஹரீசுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இவர்களது கள்ளத்தொடர்புக்கு ஆனந்த் இடையூறாக இருந்துள்ளார். இதையடுத்து, 2 மாதத்திற்கு முன்பு உணவில் தூக்க மாத்திரைகளை கலந்து ஆனந்திற்கு அனிதா கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்ட அவர் அயர்ந்து தூங்கி உள்ளார்.

அந்த சந்தர்பத்தில் வீட்டுக்கு வந்த ஹரீஷ், அனிதா 2 பேரும் சேர்ந்து ஆனந்தின் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார்கள். பின்னர் அவரது உடலை வனப்பகுதியில் கொண்டு வீசுவதற்கு திட்டமிட்டனர். ஆனால் அவரது உடலை ஹரீஷ், அனிதாவால் தூக்கி அப்புறப்படுத்த முடியவில்லை. இதனால் தற்கொலை செய்தது போல் செய்து விடலாம் என்று முடிவு செய்துள்ளனர்.

சிறையில் அடைப்பு

இதையடுத்து, குளியலறைக்குள் ஆனந்த் உடலை எடுத்து சென்றுள்ளனர். அங்கு வைத்து கத்தியால் கையை அறுத்து விட்டு, தற்கொலை செய்தது போல் நாடகமாடி உள்ளனர். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் ஆனந்த் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்ததால், அனிதாவும், ஹரீசும் போலீசாரிடம் சிக்கி இருந்தார்கள்.

கைதான 2 பேர் மீதும் காடுகோடி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசாரணைக்கு பின்பு 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com