உத்தரபிரதேசத்தில் திருமண வீட்டில் புதுமண தம்பதி உள்பட 5 பேர் தலை துண்டித்து படுகொலை

உத்தரபிரதேசத்தில் திருமண வீட்டில் புதுமண தம்பதி உள்பட 5 பேர் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டனர். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட நபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
உத்தரபிரதேசத்தில் திருமண வீட்டில் புதுமண தம்பதி உள்பட 5 பேர் தலை துண்டித்து படுகொலை
Published on

தம்பியின் திருமணத்துக்காக...

உத்தரபிரதேச மாநிலம் மெயூன்புரி மாவட்டம் கோகுல்பூரா கிராமத்தை சேர்ந்தவர் சிவ்வீர் யாதவ். 28 வயதான இவர் திருமணமாகி டெல்லி அருகே நொய்டாவில் வசித்து வந்தார். இந்த நிலையில் சிவ்வீரின் தம்பி சோனுவுக்கும் (21), சோனி (20) என்ற பெண்ணுக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக மனைவி டோலியுடன் சிவ்வீர் சொந்த கிராமத்துக்கு சென்றிருந்தார்.

கோடாரியால் வெட்டினார்

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திருமண வீட்டில் புதுமண தம்பதிகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உறங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவில் திடீரென தூக்கத்தில் இருந்து எழுந்த சிவ்வீர், வீட்டில் இருந்த கோடாரியை எடுத்துக்கொண்டு புதுமண தம்பதிகள் இருந்த அறைக்குள் நுழைந்தார். அங்கு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தம்பி சோனு மற்றும் தம்பியின் மனைவி சோனி ஆகியோரின் கழுத்தில் கோடாரியால் வெட்டினார். இதில் அவர்களது தலை துண்டானது.

மனைவிக்கும் கோடாரி வெட்டு

பின்னர் அங்கிருந்து வெளியே வந்த சிவ்வீர், பக்கத்து அறையில் உறங்கி கொண்டிருந்த தனது மற்றொரு தம்பி புல்லான் (25), மைத்துனர் சவுரப் (23) குடும்ப நண்பர் தீபக் (20) ஆகியோரையும் தலையை துண்டித்து கொலை செய்தார். இதனை தடுக்க முயன்ற தனது மனைவி டோலி (24), அத்தை சுஷ்மா (35) ஆகியோரையும் சிவ்வீர் கோடாரியால் வெட்டினார். இதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.

துப்பாக்கியால் சுட்டு தற்கெலை

அதனை தொடர்ந்து இந்த கொடூரத்தை அரங்கேற்றிய சிவ்வீர் வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த டோலி மற்றும் சுஷ்மாவை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

சோகத்தில் மூழ்கிய கிராமம்

கொலை மற்றும் தற்கொலையின் பின்னணியிலான காரணங்கள் என்ன என்பது உடனடியாக தெரியாத நிலையில் இதுப்பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமண வீட்டில் புதுமணத்தம்பதி உள்பட 5 பேர் தலை துண்டித்து கொல்லப்பட்ட சம்பவம் கிராம மக்களிடையே அதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com