

புதுடெல்லி,
முத்தலாக் தடைச் சட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு முஸ்லிம் வழக்கறிஞர் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. முஸ்லிம் வழக்கறிஞர்கள் அமைப்பு சார்பில் வழக்கறிஞர் கமலேஷ் குமார் மித்ரா ஆஜராகினார்.
அவர் வாதிடுகையில், " மத்திய அரசு முத்தலாக் நடைமுறையைத் தடை செய்ய கொண்டு வந்துள்ள முத்தலாக் தடைச் சட்டம் அடிப்படை உரிமையை மீறுகிறது. இந்தச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படும்போது, முஸ்லிம் பெண்களும், ஆண்களும் தங்களின் அடிப்படை உரிமையை உடனடியாக இழந்து விடுவார்கள். இதனால், முத்தலாக் தடைச் சட்டத்தை சட்டவிரோதம் என்று அறிவித்து அந்தச் சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்" என தெரிவித்தார்.
இதையடுத்து, இந்த மனு மீது மத்திய அரசு பதில் அளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி ரமணா உத்தரவிட்டார்.