

மும்பை,
நாடு முழுவதும் பசு பாதுகாவலர்கள் என தங்களை அழைத்துக் கொள்பவர்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபடும் சம்பவமானது அதிகரித்து காணப்படுகிறது. இவ்விவகாரத்தில் மத்திய அரசு மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. பசு பாதுகாவலர்கள் வன்முறையில் ஈடுபடுவது அதிகரித்து வரும்நிலையில் இதற்கு எதிராக போராட்டமும் தொடங்கியது. இந்த நிலையில் கடந்த வாரம் காந்தியடிகளின் சபர்மதி ஆசிரமத்தின் நூற்றாண்டு விழாவில் பேசிய பிரதமர் மோடி, பசு பாதுகாப்பு என்ற பெயரில் மக்களை கொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என எச்சரிக்கை விடுத்தார்.
ஆனாலும், பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் நடைபெறும் தாக்குதல்கள் சம்பவம் குறைந்தபாடில்லை. இந்த நிலையில், மராட்டிய மாநிலத்தின் ஜலகேதா நகர பகுதியில், கடந்த புதன் கிழமை பிற்பகல் மாட்டிறைச்சி எடுத்துச்செல்வதாக கூறி சலிம் இஸ்மாயில் ஷா(வயது 36) என்பவர் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. பசுபாதுகாவலர்களின் தாக்குதலால் படுகாயம் அடைந்த ஷா உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நிகழ்ச்சி ஒன்றிற்காக இறைச்சி வாங்கி கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் சலீம் இஸ்மாயில் ஷா பயணித்து கொண்டிருந்ததாகவும், அப்போது, மாட்டிறைச்சி எடுத்துச்செல்வதாக கூறி, ஷா மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பசுபாதுகாவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட ஷா கடோல் தாலுகா பகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் சிறுபான்மை பிரிவு தலைவராக உள்ளார்.இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.