ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: கர்நாடக முதல் மந்திரிக்கு முஸ்லிம் மாணவி கோரிக்கை

ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதிக்குமாறு கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மைக்கு, ஹிஜாப் தடைக்கு எதிராக மனு தாக்கல் செய்த மாணவி கோரிக்கை விடுத்துள்ளார்.
கோப்புப் படம் (பிடிஐ)
கோப்புப் படம் (பிடிஐ)
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு, ஹிஜாப் விவகாரம் தொடர்பாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.

இதனையடுத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் சீருடையில் மட்டுமே வர அறிவுறுத்தி கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரி முஸ்லிம் மாணவிகள் உள்பட பலர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், ஹிஜாப் அணிவது இஸ்லாமில் அத்தியாவசியம் கிடையாது எனக்கூறி ஹிஜாப் அணிய தடை விதித்த உத்தரவை ரத்து செய்ய மறுத்துவிட்டது. இந்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கர்நாடகாவில் வரும் 22 ஆம் தேதி பல்கலைக்கழக முந்தைய தேர்வுகள் தொடங்க உள்ளன. இந்த நிலையில், கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மைக்கு, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஒரு மாணவி டுவிட்டர் மூலமாக கோரிக்கை விடுத்துள்ளார். அதில், எங்கள் எதிர்காலம் பாழாகாமல் தடுக்க இன்னும் உங்களுக்கு ( பசவராஜ் பொம்மை) வாய்ப்பு உள்ளது. ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத எங்களை அனுமதிக்க வேண்டும். தயவு செய்து இதை பரிசீலியுங்கள். நாங்கள் இந்த நாட்டின் எதிர்காலம் என்று தெரிவித்துள்ளார்.

கர்நாடக அரசு ஹிஜாப் அணிவதற்கு விதித்த தடையை நீக்கும் வரை தேர்வு எழுதப் போவது இல்லை என அந்த மாணவி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com