கவி சித்தேஸ்வரா மடத்தில் தினமும் ஒரு மணி நேரம் தியானம் செய்யும் முஸ்லிம் பெண்

கடந்த 13 ஆண்டுகளாக நான் இந்த மடத்திற்கு வந்து செல்கிறேன் என்று முஸ்லிம் பெண் கூறினார்.
கவி சித்தேஸ்வரா மடத்தில் தினமும் ஒரு மணி நேரம் தியானம் செய்யும் முஸ்லிம் பெண்
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் கொப்பல் (மாவட்டம்) டவுனில் கவி சித்தேஸ்வரா மடம் உள்ளது. இந்த மடத்தின் ஆண்டு திருவிழா தெற்கின் கும்பமேளா என பக்தர்களால் அழைக்கப்படுகிறது. அந்த அளவுக்கு ஆண்டு திருவிழா கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த மடத்திற்கு கடந்த 8 நாட்களாக முஸ்லிம் பெண் ஒருவர் பர்தா அணிந்து வந்து தியானம் செய்து வருகிறார். அதாவது அந்த பெண், கொப்பல் மாவட்டம் எலபுர்கா தாலுகாவில் குடாரி மோதியில் வசிக்கும் ஹசீனா பேகம் தான். மடத்தில் உள்ள நாகதேவர் சிலை முன் அமர்ந்து அவர் ஒரு மணி நேரம் தியானம் செய்து வருகிறார். இந்த மடத்திற்கு இந்துக்கள் தான் வந்து செல்வது வழக்கம். முதல் முறையாக முஸ்லிம் பெண் வந்து தியானம் செய்து வருவது பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து ஹசீனா பேகம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மன அமைதிக்காக கவி சித்தேஸ்வரா மடத்திற்கு வந்து தியானம் செய்து வருகிறேன். 11 நாட்கள் நான் இந்த தியானம் மேற்கொள்ள உள்ளேன். எனது மனம் நிம்மதி இல்லாமல் இருந்தது. இதனால் எனது வாழ்க்கை மிகவும் கடினமாக இருப்பதாக உணர்ந்தேன். அதனால் மடத்தின் சுவாமியிடம் கேட்டு தியானம் செய்து வருகிறேன். நான் ஒரு முஸ்லிமாக இருந்தாலும் அனைத்து மதங்களும் ஒன்று தான்.

கடந்த 13 ஆண்டுகளாக நான் இந்த மடத்திற்கு வந்து செல்கிறேன். முஸ்லிம் என்பதால் என்னிடம் இந்த மடத்தில் எந்த பாகுபாடும் காட்டவில்லை. ஒருவரின் செயலால் எனது மனது புண்பட்டுள்ளது. அதனால் தினமும் ஒரு மணி நேரம் தியானம் செய்து வருகிறேன். இந்த தியானத்தால் எனது மனது அமைதி பெற்று வருகிறது. எனது குழந்தைகளுக்கும் மடாதிபதியின் ஆசி உள்ளது. நான் நாகப்பாவையும், பசவண்ணரையும் நினைத்து தியானம் செய்கிறேன். என் மனம் முழுஅமைதி பெறும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com