முத்தலாக் அவசர சட்டம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்

முத்தலாக் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
முத்தலாக் அவசர சட்டம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்
Published on

புதுடெல்லி,

முஸ்லிம்களிடையே முத்தலாக் மூலம் விவாகரத்து பெறும் நடைமுறை இருந்து வருகிறது. மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடை விதிக்கும் வகையில், முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்ட மசோதா கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது மக்களவையில் நிறைவேறியது.

ஆனால், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பின் காரணமாக நிலுவையில் உள்ளது. கடந்த மழைக்கால கூட்டத் தொடரில் இந்த சட்ட மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது. இதற்காக எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று மசோதாவில் மூன்று முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டு, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலும் பெறப்பட்டது.

ஆனாலும், கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால், மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவில்லை. மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்பியபின் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தது. எனவே முத்தலாக் மசோதா மீண்டும் கிடப்பில் போடப்பட்டது. இதனால் அவசர சட்டம் மூலம் முத்தலாக் நடைமுறைக்கு எதிரான சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்தது.

டெல்லியில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முத்தலாக் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 3 அவசர சட்டங்கள் மூலம் முத்தலாக் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதன்மூலம் முதலாவதாக, முத்தலாக் தடுப்பு சட்டத்தில் கைதானால் நீதிமன்றத்தில் ஜாமீன் பெறலாம். இரண்டாவதாக, முத்தலாக் வழங்கியபின் கணவன் மனைவி இடையே சமரசம் ஏற்பட்டால் அபராதம் செலுத்தி மீண்டும் சேரலாம். மூன்றாவதாக, முத்தலாக்கில் கணவன், மனைவியின் குடும்பத்தினர் மட்டுமே புகார் அளிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இந்த அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதனை அடுத்து அவசர சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com