

முசாபர்நகர்,
முசாபர்நகர் கலவரம் தொடர்பான ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 8 பேரையும் உள்ளூர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு நடந்த கலவரத்தில் 62 பேர் கொல்லப்பட்டனர். 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிருக்குப் பயந்து அண்டை மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்தனர். இந்த கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியது. மொத்தம் 175 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அவற்றின் அடிப்படையில் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெறுகிறது.
இந்நிலையில் முசாபர்நகர் கலவரத்தின் போது நடந்த மூன்று பேர் படுகொலை தொடர்பான வழக்கில், போதிய ஆதாரங்கள் இல்லாததால் குற்றம் சாட்டப்பட்ட 8 பேரையும் உள்ளூர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
2013-ஆம் ஆண்டு செப்டம்பர் 7-ஆம் தேதி, புர்பாலியன் கிராமத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து கூட்டத்தில் கலந்துகொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த ராஜவீர் (60), விகாஸ் (21) மற்றும் மகேந்திரா (65) ஆகிய மூன்று பேர் கடுமையாக தாக்கி படுகொலை செய்யப்பட்டனர். சிறப்பு புலனாய்வுக் குழு இந்த வழக்கை விசாரித்து, ஆசாத், ஷவுகத், ஜிலா, ஆஸ் முகமது, ஷாகிர் அலி, நூர் ஹசன், லியாகத், அலி முகமது, சவுத் மற்றும் யமீன் ஆகிய 10 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. வழக்கு விசாரணை நடைபெற்ற காலத்தில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் சவுத் மற்றும் யமீன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
இவ்வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, குற்றம்சாட்டப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்து கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி விஜய் குமார் உத்தரவிட்டார். வழக்கின் புகார்தாரரான அஜேந்திர குமார் உட்பட அரசு தரப்பு சாட்சிகள் 33 பேர், குறுக்கு விசாரணையின் போது தங்கள் முந்தைய வாக்குமூலங்களிலிருந்து பின்வாங்கியதாலும், அரசு தரப்பு வாதத்திற்கு முரணாக இருந்ததாலும் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.