

பாட்னா,
மும்பையை சேர்ந்த டாட்டா சமூக அறிவியல் நிறுவனம் பீகாரில் உள்ள சிறுமிகள் காப்பகத்தில் தணிக்கை மேற்கொண்டது. அப்போது முசாபர்பூரில் இயக்கும் அரசு உதவி பெறும் காப்பகத்தில் பல சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கை சமர்பித்தது.
இது அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்தக் காப்பகத்தில் இருந்த 42 சிறுமிகளும் வேறு காப்பகத்துக்கு மாற்றப்பட்டனர். சிறுமிகளுக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் 34 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்குள்ளானது தெரியவந்தது. இந்நிலையில் இவ்விவகாரத்தில் முக்கியக் குற்றவாளியான பிரஜேஷ் குமார் தாக்கூரை, அவர்தான் இந்த விடுதியை நடத்தி வந்தவர். இவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சிறுமிகள் விடுதிக்கு மாநில சமூக நலத்துறை அமைச்சர் குமாரி மஞ்சு வர்மாவின் கணவர் சந்தேஷ்வர் வர்மா அடிக்கடி சென்று வந்ததாகவும், அதனால் பாலியல் வன்கொடுமை வழக்கில் சந்தேஷ்வர் வர்மாவுக்கும் தொடர்பு இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதையடுத்து குமாரி மஞ்சு வர்மா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததால் குமாரி மஞ்சு வர்மா ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் நிதிஷ் குமாரிடம் வழங்கினார்.
இந்நிலையில் வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் பாட்னாவிலுள்ள முன்னாள் அமைச்சர் மஞ்சு வர்மா வீடு உள்பட அவருக்கு சொந்தமான 5 இடங்களிலும், வழக்கின் முக்கிய குற்றவாளியான பிரஜேஷ் குமார் தாக்கூருக்கு சொந்தமான 7 இடங்கள் என மொத்தம் 12 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி 50 தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.
அதே போல் பிரஜேஷ் குமார் தாக்கூரிடம் தொடர்பிலிருந்த முன்னாள் மாநில சமூக நலத்துறை அமைச்சர் தாமோதர் ரவாட்டிடம் சிபிஐ அதிகாரிகள் பல கேள்விகள் எழுப்பினர். இதனிடையே முன்னாள் அமைச்சர் மஞ்சு வர்மா மற்றும் அவரது கணவர் சந்தேஷ்வர் வர்மா ஆகியோர் மீது சிபிஐ அதிகாரிகள் ஆயுதச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.