

பெங்களூரு
கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா இன்று கூறும்போது, சிவக்குமாருடனான என்னுடைய பிணைப்பு பாலும், தேனும் போன்றது. இந்த முறை எங்களுடைய கட்சி ஆட்சிக்கு வந்ததும், வேலையில்லாத எதிர்க்கட்சி தலைவர்கள் எனக்கும், சிவக்குமாருக்கும் இடையேயான உறவில் கசப்புணர்வை ஏற்படுத்த பார்க்கின்றனர் என குற்றச்சாட்டாக கூறினார்.
அசோக் அல்லது எச்.டி. குமாரசாமிக்கு இது வேலைக்கு ஆகாது என தெரியும். அது எங்களுடைய பாலும் தேனும் போன்ற உறவில் எந்த பாதிப்பும் ஏற்படுத்த போவதில்லை என தெரிவித்து உள்ளார்.
முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமாருடைய தொலைபேசி அழைப்புகளை உளவு பார்க்கிறார் என மத்திய மந்திரி எச்.டி. குமாரசாமி குற்றச்சாட்டு கூறியிருந்த நிலையில், அதனை சித்தராமையா நிராகரித்து உள்ளார்.
சிவக்குமாரை தங்கள் பக்கம் இழுக்க பா.ஜ.க.வும், மதசார்பற்ற ஜனதா தளமும் முயற்சிக்கின்றன என கூறிய சித்தராமையா, காங்கிரஸ் அரசுக்கு இடையூறு ஏற்படுத்த அவர்கள் முயற்சிக்கின்றனர் என்றும் குற்றச்சாட்டாக கூறினார். காங்கிரஸ் கட்சி முழுமையாக 5 ஆண்டு காலம் ஆட்சியை நிறைவு செய்யும் என்றும் அப்போது அவர் கூறினார்.