

மும்பை,
மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் கடந்த 2-ந் தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில், நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட சிலர் போதைப்பொருள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து ஆர்யன் கான் மற்றும் சிலரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மறுநாள் கைது செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது.
ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டு உள்ள ஆர்யன் கான் தாக்கல் செய்த ஜாமீன் மனு மும்பை ஐகோர்ட்டில் நாளை (செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இதற்கிடையில், ஆர்யன் கானை கைது செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவின் தலைமை அதிகாரியாக செயல்பட்டு வருபவர் சமீர் வான்கடே. ஆர்யன் கான் கைது செய்யப்பட்டதில் இருந்து சமீர் வான்கடேவை குறிவைத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மராட்டிய மந்திரியுமான நவாப் மாலிக் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். ஆர்யன் கானை திட்டமிட்டு இந்த சதிவலையில் சிக்கவைத்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்து வருகிறார்.
அந்த வகையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரியான சமீர் வான்கடே போலியான சான்றிதழ்களை கொடுத்து வேலைக்கு சேர்ந்துள்ளார் என நவாப் மாலிக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சமீர் வான்கடே ஒரு முஸ்லீம் என தெரிவித்துள்ள நவாப் மாலிக் போலியான ஜாதி சான்றிதலை பயன்படுத்தி பட்டியலினத்தவர்கள் இடஒதுக்கீட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் இணைந்துள்ளார் என்று குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், சமீர் வான்கடேவின் ஜாதிச்சான்றிதழையும், சமீர் வான்கடேவின் திருமண புகைப்படத்தையும் நவாப் மாலிக் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த விவகாரம் மராட்டிய அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.
இந்நிலையில், மராட்டிய மந்திரி நவாப் மாலிக்கின் கருத்துக்கு சமீர் வான்கடே பதிலளித்துள்ளார். இது தொடர்பாக சமீர் வான்கடே வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் பல மதங்களை கொண்ட மதச்சார்பற்ற குடும்பத்தை சேர்ந்தவன். எனது தந்தை இந்து, தாயார் முஸ்லீம். எனது தனிப்பட்ட ஆவணங்களை டுவிட்டரில் வெளியிடுவது அவதூறானது மட்டுமல்லாமல் எனது குடும்பத்தின் தனியுரிமைக்கும் எதிரானது. நவாப் மாலிக்கின் அவதூறு தாக்குதலால் வேதனையடைந்தேன் என தெரிவித்துள்ளார்.