

பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு சுப்பிரமணியபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். அந்த தம்பதியின் மகள் பிரபுதயா (வயது 21). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் வழக்கம்போல் மாணவி கல்லூரிக்கு சென்றார். அவரது பெற்றோரும் வெளியே சென்று இருந்தனர்.
இதற்கிடையே அன்றைய தினம் இரவு 7 மணி அளவில் அவரது பெற்றோர் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டு கழிவறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிரபுதயா பிணமாக கிடந்தார். இதைக்கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சுப்பிரமணியபுரா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே அவரது அறை முழுவதும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது 3 கடிதங்கள் சிக்கின. அதில் 'என்னை மன்னித்து விடு அம்மா' என எழுதப்பட்டு இருந்தது. மேலும் சில வாக்கியங்களும் எழுதப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. அந்த கடிதங்களை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர். மேலும் ஆய்வு செய்தனர். ஆனால் மாணவியின் கையெழுத்துடன், கடிதத்தில் இருந்த எழுத்துக்கள் ஒத்துப்போகவில்லை.
இதையடுத்து மாணவியின் தாய் சவுமியாவிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது தனது மகள் தற்கொலை செய்யவில்லை என்றும், தினமும் கல்லூரி முடிந்து வீடு திரும்பியவுடன் தன்னை செல்போனில் தொடர்பு கொண்டு பேசுவார் எனவும், சம்பவத்தன்று தனது தோழிகளுடன் கடையில் பானி பூரி சாப்பிட்டு வருவதாகவும் கூறியதாக தெரிவித்தார். ஆனால் வீடு திரும்பியபோதும் பிரபுதயா தன்னை தொடர்பு கொண்டு பேசவில்லை என்றும் சவுமியா தெரிவித்தார்.
அத்துடன் தனது வீட்டின் பின்பக்க வாசல் கதவு திறந்து கிடப்பதாகவும், மர்மநபர்கள் தான் தனது மகளை கத்தியால் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டதாக குற்றம்சாட்டினார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பிரபுதயா ஏற்கனவே 3 முறை தற்கொலைக்கு முயன்றதாகவும், அப்போது அவரை குடும்பத்தினர் காப்பாற்றியதும் தெரியவந்தது.
சம்பவம் குறித்து பெங்களூரு தெற்கு மண்டல துணை போலீஸ் சூப்பிரண்டு லோகேஷ் கூறுகையில், 21 வயது கல்லூரி மாணவி வீட்டின் கழிவறையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது உடலில் காயங்கள் உள்ளன. அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.