

விசாகப்பட்டினம்,
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் ஏலூரில் கடந்த டிசம்பரில் மர்மநோயால் பாதிக்கப்பட்ட மக்கள், திடீரென மயங்கி விழுந்தனர். வாந்தி, வலிப்புக்கு ஆளாயினர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 347 ஆக உயர்ந்தது. அவர்களில் பெரும்பாலானவர்கள் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள். 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 45 பேர் இருந்தனர். சுமார் 200 பேர் குணமடைந்த பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர்களை முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தகுந்த சிகிச்சை அளிக்கவும் டாக்டர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.
டாக்டர்கள் குழு ஒன்று, ஏலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றது. அங்கு, முழுமையான பரிசோதனைக்காக ரத்த மாதிரிகளை சேகரித்தது. எனினும் பல்வேறு பரிசோதனைகளுக்கு பின்பும், நோய்க்கான காரணம் பற்றி சுகாதாரத்துறை அதிகாரிகளால் அறிய முடியவில்லை.
இந்நிலையில், ஆந்திர பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் புல்லா மற்றும் கோமிரப்பள்ளி ஆகிய கிராமங்களில் பலபேரை மீண்டும் மர்ம நோய் தாக்கியுள்ளது. இதனால் அவர்கள் உடல்நலம் மோசமடைந்து உள்ளது.
இதனை தொடர்ந்து, அவர்கள் ஏலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியும் அதிகாரிகளை ஏலூருக்கு செல்லும்படி உத்தரவிட்டு நிலைமையை நேரில் கண்காணிக்கும்படி கூறியுள்ளார்.
ஆந்திர தலைமை செயலாளர் ஆதித்யநாத் தாஸ், மருத்துவ மற்றும் சுகாதார முதன்மை செயலாளர் அனில் குமார் சிங்கால், மருத்துவ மற்றும் சுகாதார ஆணையாளர் கட்டமனேனி பாஸ்கர் ஆகியோர் ஏலூருக்கு உடனடியாக புறப்பட்டு சென்றுள்ளனர்.
மருத்துவ மற்றும் சுகாதார துறையானது, மக்கள் யாரும் அச்சம் கொள்ளவேண்டாம் என கேட்டு கொண்டுள்ளது. கடந்த டிசம்பர் இறுதியில், ஏலூரில் மர்ம நோய் பலரையும் தாக்கியது. இது மற்ற இடங்களுக்கும் பரவி மக்கள் மயங்கி விழுந்தனர். வாந்தி, வலிப்புக்கு ஆளாயினர். மற்றும் பிற அறிகுறிகளையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், மீண்டும் மற்றொரு மர்ம நோய் தாக்குதலால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர்.