

மும்பை,
இந்தி நடிகர் ஓம்புரி கடந்த 6ந் தேதி மும்பை அந்தேரியில் உள்ள தன்னுடைய வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்தார். பிரேத பரிசோதனையின் போது, அவரது தலையில் காயம் ஏற்பட்டது வெளிச்சத்துக்கு வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதாவது, மாரடைப்பு ஏற்பட்டதும் 66 வயது நடிகர் ஓம்புரி தரையில் தொப்பென விழுந்திருக்கிறார். இதன் காரணமாக அவரது தலையில் அடிபட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஓம்புரி மரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுபற்றி அவரது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.
இந்த வழக்கில் சந்தேகத்துக்கு இடமாக ஏதும் தோன்றவில்லை என்றாலும், அனைத்து கோணத்திலும் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதேவேளையில், ஓம்புரி வீட்டின் கண்காணிப்பு கேமராவில் சந்தேகத்து இடமாக ஏதும் பதிவாகவில்லை என்று போலீசார் குறிப்பிட்டனர்.