மைசூரு தசரா செப்டம்பர் 22-ந்தேதி தொடக்கம்.. 11 நாள் கொண்டாட்டம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மைசூரு தசரா செப்டம்பர் 22-ந்தேதி தொடங்கி அக்டோபர் 2-ந்தேதி வரை நடைபெறும் என்று கர்நாடக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொண்டாடப்படும் புகழ்பெற்ற தசரா விழா இந்த ஆண்டு 11 நாட்கள் கொண்டாடப்படும் என தகவல் வெளியாகி இருந்தது. இது 415-வது தசரா விழாவாகும். அதாவது பஞ்சமி திதி காரணமாக தசரா ஊர்வலம் ஒரு நாள் தள்ளி நடத்தப்பட இருப்பதாகவும், அதற்கு ஏற்ப இந்த ஆண்டு தசரா 11 நாட்கள் நடத்தப்படும் என்று தகவல் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் இந்த ஆண்டு(2025) மைசூரு தசரா விழா குறித்து பெங்களூரு விதானசவுதாவில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், மந்திரிகள் எச்.சி.மகாதேவப்பா, கே.ஜே.ஜார்ஜ், சிவராஜ் தங்கடகி மற்றும் மைசூரு எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டம் முடிந்ததும் முதல்-மந்திரி சித்தராமையா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

மாநிலத்தில் இந்த ஆண்டு நல்ல மழை பெய்துள்ளது. அணைகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி உள்ளன. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாநிலத்தில் விவசாய பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது. அதனால் உலக புகழ் பெற்ற மைசூரு தசரா விழாவை மிகவும் விமரிசையாக கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி மைசூரு தசரா விழா செப்டம்பர் மாதம் 22-ந் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 2-ந்தேதி வரை நடைபெற உள்ளது. அதாவது தசரா விழா 10 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு மொத்தம் 11 நாட்கள் தசரா விழா கொண்டாடப்பட உள்ளது.

செப்டம்பர் 22-ந் தேதி காலை 10.10 மணியில் இருந்து 10.45 மணிக்குள் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, தேரில் எழுந்தருளும் அம்மனுக்கு பூக்கள் தூவுவதன் மூலம் தசரா விழா தொடங்க உள்ளது. தசரா விழாவை எப்போதும் பொதுவான நபர் தொடங்கி வைப்பது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் பொதுவான நபரே தசரா விழாவை தொடங்கி வைப்பார். அவர் யார் என்பதை ஆலோசித்து முடிவு செய்வோம். மேலும் ஜம்பு சவாரி ஊர்வலத்துக்கான முதல்கட்ட கஜபயணம் வருகிற ஆகஸ்டு 4-ந் தேதி தொடங்குகிறது. அக்டோபர் 2-ந்தேதி விஜயதசமி மற்றும் ஜம்புசவாரி ஊர்வலம் நடைபெறுகிறது. அன்றைய தினம் மதியம் 1 மணிக்கு நந்திக்கு பூஜை நடக்கிறது. ஜம்பு சவாரி ஊர்வலத்திற்காக மாலை 4.42 மணியில் இருந்து 5.06 மணிக்குள் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பூக்கள் தூவப்படும்.

கடந்த ஆண்டு(2024) தசரா விழாவுக்காக ரூ.40 கோடி நிதி வழங்கப்பட்டது. இந்த ஆண்டு மிகவும் கோலாகலமாக கொண்டாட முடிவு செய்திருப்பதால், கூடுதல் நிதி ஒதுக்கப்படும். ஜம்பு சவாரி ஊர்வலத்தில் இடம் பெறும் வாகனங்களில் மகாத்மா காந்தி, அரசின் 5 உத்தரவாத திட்டங்களும் இடம் பெறும். அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தி என்பதால், மகாத்மா காந்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. தசரா விழாவின் போது ஏற்படும் கூட்ட நெரிசலை தடுக்கவும், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கவும் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

இந்த முறை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் ஜம்பு சவாரி ஊர்வலத்தை காண திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும். அரண்மனை முன்பாக கடந்த முறை 54 ஆயிரம் இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தது. மக்கள் கூடுவதை தடுக்க, அரண்மனை முன்பு இந்த ஆண்டு குறைவான இருக்கைகளே அமைக்கப்படும்.

சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பில் பிரச்சினை ஏற்படுவதை தடுப்பதில் போலீசார் கவனம் செலுத்த வேண்டும். சாமுண்டி மலை, கே.ஆர்.எஸ். அணை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் சாலைகள் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை தற்போதில் இருந்தே தொடங்க வேண்டும். கடந்த ஆண்டு மின்விளக்கு அலங்காரங்கள் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது. அதுபோல், இந்த ஆண்டு 21 நாட்கள் மின்விளக்கு அலங்காரம் செய்யப்படும்.

மைசூரு நகரின் அழகை மேம்படுத்த மேலும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். தசரா விழாவை காணவரும் பொதுமக்களுக்கு வசதியாக கூடுதலாக கழிவறை வசதிகள், வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க தேவையான ஏற்பாடுகளை செய்யும்படியும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளேன். இந்த முறை அதிகளவு டிரோன் பறக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

பொதுவாக தசரா விழாவின் போது மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள், மக்களின் பிற பிரச்சினைகளை தீர்க்க முன்வருவதில்லை என்ற குற்றச்சாட்டு வருகிறது. அது இந்த முறை இருக்க கூடாது. மக்கள் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களை சந்திக்கவும் நேரம் ஒதுக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் தசரா நிகழ்ச்சிகள் நடக்கும் பகுதிகளில் கூட்ட நெரிசல் ஏற்படாமல் தடுக்க வேண்டும்.

தேவையில்லாமல் பணம் செலவு செய்யக்கூடாது. தசரா விழாவை பார்க்க வரும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். அதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளேன். நமது பண்பாடு, கலாசாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து தசரா விழா கொண்டாடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com