மெஜாரிட்டி பெறுவதற்காக எதிர்க்கட்சி உறுப்பினர்களை இழுக்கும் முயற்சியில், பா.ஜனதா - முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதில் தீவிரம்

மாநிலங்களவையில் மெஜாரிட்டி பெறுவதற்காக எதிர்க்கட்சி உறுப்பினர்களை இழுக்கும் முயற்சிகளில் பா.ஜனதா தீவிரமாக இறங்கி உள்ளது.
மெஜாரிட்டி பெறுவதற்காக எதிர்க்கட்சி உறுப்பினர்களை இழுக்கும் முயற்சியில், பா.ஜனதா - முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதில் தீவிரம்
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி, தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியை பிடித்து உள்ளது. மக்களவையில் பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை உள்ளபோதும், மாநிலங்களவையில் அந்த கட்சியால் போதிய மெஜாரிட்டியை இன்னும் பெற முடியவில்லை. இதனால் பல மசோதாக்கள் முடங்கி உள்ளன.

குறிப்பாக முத்தலாக், குடியுரிமை மசோதா போன்ற பா.ஜனதாவின் சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்ட மசோதாக்களை நிறைவேற்ற முடியாததை பெரும் குறையாக அந்த கட்சியின் தலைவர்கள் கருதுகின்றனர். எனவே இந்த முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதில் அந்த கட்சி தீவிரமாக உள்ளது.

இந்த மசோதாக்களுக்கு ஐக்கிய ஜனதாதளம் போன்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட ஆதரவு அளிக்கவில்லை. இதைப்போல தேசிய ஜனநாயக கூட்டணியில் இல்லாமல், அதேநேரம் காங்கிரஸ் கூட்டணியிலும் இல்லாமல் நடுநிலை வகித்து வரும் பிஜூ ஜனதாதளம், தெலுங்கானா ராஷ்டிர சமிதி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் போன்ற கட்சிகளின் ஆதரவை பெறுவதிலும் பா.ஜனதா சறுக்கி வருகிறது.

எனவேதான் எதிர்க்கட்சி உறுப்பினர்களை பா.ஜனதாவில் சேர்த்தும், ராஜினாமா செய்ய வைத்தும் மாநிலங்களவையில் மெஜாரிட்டியை பெறும் முயற்சிகளை பா.ஜனதா தீவிரப்படுத்தி வருகிறது. அதனடிப்படையில்தான் சமீபத்தில் தெலுங்குதேசம் கட்சியை சேர்ந்த 4 எம்.பி.க்கள் பா.ஜனதாவில் இணைந்துள்ளனர்.

இதைப்போல உத்தரபிரதேசத்தில் இருந்து சமாஜ்வாடி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன் நீரஷ் சேகர் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். உத்தரபிரதேச சட்டசபையில் பா.ஜனதா வலுவாக உள்ளதால், இந்த காலியிடத்துக்கு நடத்தப்படும் இடைத்தேர்தலில் பா.ஜனதா உறுதியாக வெற்றிபெறும் நிலை ஏற்பட்டு உள்ளது.

பா.ஜனதாவின் இந்த காய் நகர்த்தல்களுக்கு மேலும் வலுவூட்டும் வகையில், பா.ஜனதாவினர் அணுகினால் சமாஜ்வாடி எம்.பி.க்கள் பலர் கட்சி மாறும் முடிவில் இருப்பதாக நீரஜ் சேகர் கூறியுள்ளார். எனினும் அவர்கள் அனைவரும் கட்சி மேலிடத்தின் மீதுள்ள திருப்தி காரணமாகத்தான் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

மாநிலங்களவையில் பா.ஜனதாவுக்கு தற்போது 78 உறுப்பினர்கள் உள்ளனர். 245 உறுப்பினர் கொண்ட அவையில் அடுத்த ஆண்டு இறுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி மெஜாரிட்டியை பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்னதாகவே பா.ஜனதா தனது இலக்கை அடைந்துவிடும் வாய்ப்பு உருவாகி வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com