கொரோனா வைரசை என்95 முக கவசங்கள் சிறந்த முறையில் கட்டுப்படுத்தும்; இந்திய ஆய்வாளர்கள் தகவல்

கொரோனா வைரசை என்95 முக கவசங்கள் சிறந்த முறையில் கட்டுப்படுத்துகின்றன என இஸ்ரோ ஆய்வு முடிவுகளை சுட்டி காட்டி ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்து உள்ளனர்.
கொரோனா வைரசை என்95 முக கவசங்கள் சிறந்த முறையில் கட்டுப்படுத்தும்; இந்திய ஆய்வாளர்கள் தகவல்
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரசின் பாதிப்பு தீவிர அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. அதன் பாதிப்புகளை கட்டுப்படுத்த அரசு பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்காக தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் பணிகள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்கின்றன.

இதுதவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக கவசங்கள் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்டவற்றை மக்கள் கடைப்பிடிக்க அறிவுறுத்தி வருகிறது. எனினும், கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

இதுபற்றி இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) ஆராய்ச்சியாளர் பிரசன்ன சிம்ஹா மற்றும் கர்நாடகாவை சேர்ந்த மற்றொரு ஆய்வாளர் மோகன ராவ் ஆகியோர் வெளியிட்டு உள்ள செய்தியில், இருமும்பொழுது, வைரசின் பரவலை கட்டுப்படுத்துவதில் என்95 முக கவசங்கள் சிறந்த முறையில் செயல்படுகின்றன.

முக கவசம் அணியாத நிலையில் இருமும்பொழுது, 3 மீட்டர் வரை அது பரவ கூடும். இதுவே, ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறிய கூடிய முக கவசங்களை அணிந்து கொள்ளும்பொழுது 0.5 மீட்டர்களாக பரவல் கட்டுக்குள் இருக்கும்.

என்95 முக கவசங்களை பயன்படுத்தும்பொழுது அதன் பரவல் இன்னும் கட்டுப்படுத்தப்பட்டு 0.1 மற்றும் 0.25 மீட்டர்களுக்குள் இருக்கும்.

வைரசின் பரவலை ஏற்படுத்தி, சுற்று சூழலில் அசுத்தம் செய்வதனை ஒரு நபர் எந்தளவுக்கு குறைக்கின்றாரோ, அது அந்த பகுதிக்குள் நுழையும் ஆரோக்கியமுள்ள நபர்களுக்கு சிறந்த சூழ்நிலையை ஏற்படுத்தும்.

முக கவசம் அனைத்து துகள்களையும் வடிகட்ட இயலாது என்றாலும், தொலைவில் இருந்து துகள்கள் நம்மை நோக்கி வருவதனை நாம் தடுக்க உதவும் என தெரிவித்து உள்ளனர்.

எனினும், கொரோனா தொற்றின் பரவலை கட்டுப்படுத்த இதுபோன்ற முக கவசங்கள் இல்லாத சூழலில், முக கவசமே இல்லாமல் இருப்பதற்கு ஏதேனும் ஒரு வகை முக கவசம் அணிந்து கொள்வது மக்களுக்கு பயன் தரும். கைகளை வைத்து மறைத்து கொள்வது சரியான பலனை தராது என்றும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

ஏனெனில், இருமும்பொழுது எந்தவகை இடைவெளி இருப்பினும் அதன் வழியே எளிதில் பரவல் ஏற்பட கூடும். எனவே, போதிய இடைவெளியுடன் இருப்பது அவசியம். அதனுடன் முக கவசங்கள் அணிந்து கொள்வது நல்ல பலனை தரும். தொடர்ந்து சமூக இடைவெளியை பின்பற்றி, அவற்றை அணிய வேண்டும் என தங்கள் ஆய்வு முடிவில் ஆய்வாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com