உத்தரபிரதேசத்தில் செயல்படாத மந்திரிகள், எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு இல்லை: ஜே.பி.நட்டா

உத்தரபிரதேசத்தில் செயல்படாத மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படலாம் என பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உறுதிபட தெரிவித்தார்.
உத்தரபிரதேசத்தில் செயல்படாத மந்திரிகள், எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு இல்லை: ஜே.பி.நட்டா
Published on

ஆலோசனை கூட்டம்

உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் (2022) சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. எனவே இதற்கான பணிகளை ஆளும் பா.ஜனதா ஏற்கனவே தொடங்கிவிட்டது.இதற்கான ஆலோசனைகளில் கட்சியின் மாநில மற்றும் தேசிய தலைவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.அந்தவகையில் கட்சியின் தேசிய தலைவரான ஜே.பி.நட்டா உத்தரபிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் உத்தரபிரதேசத்தின் பிராஜ் பிராந்தியத்தை சேர்ந்த கட்சியின் நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகளுடன் நேற்று அவர் ஆலோசனை நடத்தினார்.இந்த கூட்டத்தில் கட்சியின் அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ், மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், மாநில தலைவர் சுவாதந்தர தேவ், மாநில பொறுப்பாளர் ராதாமோகன் சிங் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முக்கிய பங்கு வகிக்கும்

இந்த கூட்டத்தில் பேசும்போது ஜே.பி.நட்டா கூறியதாவது:-

2022-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு பின், மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி அமைப்பதற்கு பிராஜ் பிராந்தியம் முக்கியமான பங்கை வகிக்கும்.எனவே அரசுக்கும், கட்சிக்கும் இடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்த வேண்டும். அத்துடன் பூத் அளவில் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையை தொடங்க வேண்டும். இதற்காக பூத்திலேயே இரவை கழிக்க வேண்டும்.

மறுபரிசீலனை செய்யும்

கட்சியின் அமைப்பை வலுப்படுத்துவதை குறித்தே எப்போதும் சிந்திக்க வேண்டும். பூத் அளவில் கட்சியை வலுப்படுத்தி தொண்டர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். கட்சியின் திட்டங்கள் களத்தில் 100 சதவீதம் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.செயல்படாத மந்திரிகள், எம்.எல்.ஏ.க்களுக்கு தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதற்கான வாய்ப்பு மறுக்கப்படலாம். அவர்கள் விவகாரத்தில் கட்சி மறுபரிசீலனையில் ஈடுபடும்.எனினும் மீண்டும் வாய்ப்பு பெறுவதற்கான செயல்பாடுகளை மேற்கொள்ள அவர்களுக்கு இன்னும் நேரம் இருக்கிறது.

இவ்வாறு ஜே.பி.நட்டா கூறினார்.

யோகி ஆதித்யநாத் பெருமிதம்

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், பிராஜ் பிராந்தியத்தில் தனது அரசு மேற்கொண்ட வளர்ச்சிப்பணிகளை பட்டியலிட்டார். மேலும் கொரோனா காலத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் வீடுகளில்

தூங்கிக்கொண்டிருக்க, பா.ஜனதாவோ சிறப்பான பணிகளை செய்ததாக பெருமிதத்துடன் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com