கள்ளக்குறிச்சி விவகாரத்தில் காங்கிரஸ் மவுனம் காப்பது ஏன்? ஜே.பி.நட்டா கேள்வி


கள்ளக்குறிச்சி விவகாரத்தில் காங்கிரஸ் மவுனம் காப்பது ஏன்? ஜே.பி.நட்டா கேள்வி
x
தினத்தந்தி 24 Jun 2024 11:34 AM GMT (Updated: 24 Jun 2024 11:46 AM GMT)

கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற உள்ள பா.ஜ.க. போராட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு ஜே.பி.நட்டா அழைப்பு விடுத்துள்ளார்.

புதுடெல்லி,

கள்ளக்குறிச்சி கருணாபுரம் மற்றும் மாதவச்சேரியை சுற்றியுள்ள பகுதியில் கடந்த 18-ந் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் இதுவரை 58 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் தனது கூட்டணி கட்சியான திமுகவுக்கு, காங்கிரஸ் ஏன் அழுத்தம் கொடுக்காமல் மவுனம் காத்து வருகிறது என மத்திய சுகாதாரத்துறை மத்திரியும், பாஜக தேசிய தலைவருமான ஜே.பி.நட்டா கேள்வியெழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ஜே.பி.நட்டா எழுதியுள்ள கடிதத்தில்,

" கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 58 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. கணவரை இழந்த மனைவிகளும், தந்தையை இழந்த குழந்தைகளின் அழுகுரலின் காட்சிகள் அனைவரையும் பேச்சற்ற நிலைக்கு தள்ளியுள்ளது. இத்தகைய பேரிடர் நடந்த போது, உடனடியாக மக்களை காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் அரசும், காவல்துறையும் பிரச்சினைகளில் இருந்து தப்பிப்பதில் மும்முரமாக இருந்தது.

அதனால், மேலும் பலர் உயிரிழக்க நேரிட்டுள்ளது. இது அரசு நடத்திய கொலை. இந்த சம்பவம் குறித்து விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற 'இந்தியா' கூட்டணியில் உள்ள தி.மு.க.வின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறார். மாநில காவல்துறையோ, சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினரோ நேர்மையான விசாரணை நடத்துமா?கருணாபுரம் பகுதியில் அதிகளவில் பட்டியலின மக்கள் வாழ்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர். இவ்வளவு பெரிய பேரழிவு நடந்தபோது, உங்கள் தலைமையிலான காங்கிரஸ் கட்சி இதைப் பற்றி மவுனம் காத்தது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.

இந்தியா கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து, அரசுக்கு எதிராக குரல் கொடுக்காமல், மக்களையே குறை கூறியுள்ளார். இத்தருணத்தில், சி.பி.ஐ. விசாரணை நடத்தவும், தமிழக அமைச்சர் முத்துசாமியை உடனடியாக பதவியிலிருந்து நீக்கவும் இந்தியக் கூட்டணி தமிழக அரசை நீங்கள் வலியுறுத்த வேண்டும் என்று பாஜகவும் ஒட்டுமொத்த தேசமும் கோருகின்றன.

ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி அமைதியை கடைபிடிப்பதை கைவிட்டு, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை நேரில் சென்று சந்திக்கவில்லை என்றாலும், இப்பிரச்சினை குறித்து குறைந்தபட்சம் குரல் எழுப்பவேண்டும். நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு நடைபெறும் போராட்டத்தில் உங்களையும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.


Next Story