நாகாலாந்தில் சட்டசபை தேர்தல் ‘அரசியல் கட்சிகள் புறக்கணிக்க வேண்டாம்’ கிரண் ரிஜ்ஜூ கோரிக்கை

நாகாலாந்தில் சட்டசபை தேர்தலை அரசியல் கட்சிகள் புறக்கணிக்க வேண்டாம் என கிரண் ரிஜ்ஜூ கோரிக்கை விடுத்து உள்ளார். #NagalandElection #Nagaland
நாகாலாந்தில் சட்டசபை தேர்தல் ‘அரசியல் கட்சிகள் புறக்கணிக்க வேண்டாம்’ கிரண் ரிஜ்ஜூ கோரிக்கை
Published on

புதுடெல்லி,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தில் நாகா மக்கள் முன்னணி மற்றும் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்கிறது.

அருணாசலப் பிரதேசம், அசாம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களை இணைத்து நாகாலாந்தை தனி நாடாக பிரிக்க வேண்டும் என்று என்எஸ்சிஎன்-ஐஎம் அமைப்பு ஆயுதம் தாங்கி போராடியது. இந்த கோரிக்கையை ஏற்க மறுக்கப்பட்டு விட்டது.

இந்த அமைப்புடன் மத்திய அரசு கடந்த 1997-ஆம் ஆண்டு முதல் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதற்கு முன்பு அந்த அமைப்புடன் கடந்த 2015-ஆம் ஆண்டில் மத்திய அரசு ஓர் அமைதி ஒப்பந்தம் இயற்றிக் கொண்டது. கடந்த 70 ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் நாகாலாந்து பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்பு நாகாலாந்து சோஷலிஸ்ட் கவுன்சில் (என்எஸ்சிஎன்-ஐஎம்) அமைப்புடன் இறுதியாக ஓர் ஒப்பந்தம் இயற்றப்பட வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. நாகாலாந்து மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளநிலையில் இப்பிரச்சனையானது மீண்டும் தலை தூக்கி உள்ளது.

பிரச்னையைத் தீர்ப்பதற்கான பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை மத்திய அரசு தொடர்ந்து நடத்தும் என்று மத்திய அரசு கூறியது.

நேற்று தலைநகர் கோஹிமாவில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் ஆளும் நாகா மக்கள் முன்னணி, பா.ஜனதா, நாகாலாந்து காங்கிரஸ், ஆம்ஆத்மி, ஜனநாயக முன்னணி, ஐக்கிய ஜனதாதளம், தேசிய மக்கள் கட்சி உள்பட அனைத்து கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், நாகாலாந்து பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வரை தேர்தலை புறக்கணிப்பதாக அனைத்து கட்சிகளும் ஒரு மனதாக முடிவெடுத்தன. இதனால் நாகாலாந்தில் திட்டமிட்டபடி சட்டசபை தேர்தல் நடைபெறுமா என்கிற சந்தேகம் எழுந்து உள்ளது.

பாரதீய ஜனதா நடவடிக்கை

இதற்கிடையே இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட பாரதீய ஜனதா கட்சியின் இரு தலைவர்களை சஸ்பெண்ட் செய்து உள்ளது. மாநிலத்தில் தேர்தலை புறக்கணிப்பது என்பது தொடர்பான தீர்மானத்தில் கையெழுத்திட்ட அவர்கள் நீக்கப்பட்டனர். அவர்கள் இதில் கையெழுத்திட அதிகாரம் பெற்றவர்கள் கிடையாது என தெரிவிக்கப்பட்டுவிட்டது.

முன்னதாக பிரதமர் மோடி பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

கிரண் ரிஜ்ஜூ கோரிக்கை

நாகாலாந்து மாநிலத்தில் தேர்தல் நடைபெறுமா? என கேள்வி எழுந்து உள்ளநிலையில் மத்திய உள்துறை இணை மந்திரியும், பாரதீய ஜனதாவின் தேர்தல் பொறுப்பாளருமான கிரண் ரிஜ்ஜு, நாகாலாந்தில் சட்டசபை தேர்தலை அரசியல் கட்சிகள் புறக்கணிக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்து உள்ளார்.

மாநிலத்தில் சரியான நேரத்தில் தேர்தலை நடத்துவது அரசியலமைப்பின் செயல்முறையாகும். மத்திய அரசு அரசியலமைப்பால் பிணைக்கப்பட்டது. நாகாலாந்து மக்களின் உணர்வுகளை மத்திய அரசு முழுமையாக புரிந்துகொண்டு உள்ளது. தேர்தலை புறக்கணிப்பது என்பது பிரச்சினைக்கு தீர்வாக அமையாது. பிரதமர் மோடியின் நிலைப்பாடு மீது நம்பிக்கை கொண்டிருப்போம். நாகாலாந்தின் நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வுகான மத்திய அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. நாகாலாந்தில் நடக்க இருக்கும் தேர்தல் தொடர்ந்துகொண்டிருக்கும் அமைதி பேச்சுவார்த்தையை எளிதாக்குவதோடு, நமது நிலைப்பாட்டிற்கு மேலும் பலம் சேர்க்கும் என நம்புகிறோம் என கிரண் ரிஜ்ஜு கூறிஉள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com