

புதுடெல்லி,
நாகாலாந்து மற்றும் மேகாலயா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்காக அரசியல் கட்சிகள் மேற்கொண்ட தேர்தல் பிரசாரம் கடந்த ஞாயிற்றுக் கிழமை நிறைவடைந்தது.
மொத்தம் தலா 60 தொகுதிகள் கொண்ட இரு மாநிலங்களிலும் 59 தொகுதிகளிலேயே தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக இன்று காலையில் வாக்காளர்கள் வரிசையில் வந்து நின்றனர். இதனை தொடர்ந்து காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. இன்று மாலை 4 மணிவரை தேர்தலில் வாக்காளர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்யலாம்.
இரு மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் திரிபுரா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளுடன் சேர்த்து வருகிற மார்ச் 3ந்தேதி அறிவிக்கப்படும்.
சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நாகாலாந்தில் மாண் மாவட்டத்தின் திஸித் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் குண்டுவெடித்ததில் ஒருவர் காயம் அடைந்தார்.
தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெலியாங் கேட்டுக்கொண்டுள்ளார். நாகா அரசியல் தீர்வு எட்டப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். 9 மணி நிலவரப்படி 17 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.