

மும்பை,
போர்ச்சுக்கல் நாட்டில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, நாக்பூரைச் சேர்ந்த 28 வயது திருமணமான பெண் ஒருவர் மனிதக் கடத்தல் கும்பலால் விற்கப்பட்டு, அங்குள்ள மதுபானக் கடையில் சித்ரவதைக்குள்ளாகினார். பிறகு கடத்தல் கும்பலிடமிருந்து தப்பித்து இந்தியா வந்துள்ள அந்தப் பெண், புனே போலீசில் புகார் அளித்தார்.
நாக்பூரைச் சேர்ந்த பி.காம் பட்டதாரியான பெண் ஒருவர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புனேவைச் சேர்ந்த 'வி மைக்ரேட்' என்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் விளம்பரத்தைப் பார்த்தார். அதில் போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் கேஷியர் வேலை என்றும், மாதம் ரூ1.5 லட்சம் சம்பளம், தினசரி 8 மணி நேர வேலை என்றும் கூறப்பட்டிருந்தது. இதனை நம்பிய அந்தப் பெண், விசா மற்றும் இதர ஆவணங்களுக்காக பல்வேறு தவணைகளில் சுமார் ரூ.11 லட்சம் வரை அந்த நிறுவனத்திற்குப் பணம் செலுத்தினார்.
கடந்த மே மாதம் போர்ச்சுக்கல் சென்றடைந்த அந்தப் பெண்ணை அங்கிருந்த உள்ளூர் ஏஜெண்டுகள் வரவேற்று அழைத்துச் சென்றனர். ஆனால், சொன்னபடி வேலைக்கு அனுப்பாமல், ஒரு அறையில் அடைத்து வைத்து அவரது பாஸ்போர்ட்டைப் பறிமுதல் செய்தனர். மேலும், பாஸ்போர்ட்டைத் திரும்பத் தர கூடுதலாக ரூ.40,000 கேட்டு மிரட்டினர்.
அதன் பின்னர், புனே கன்சல்டன்சி நிறுவனம் தங்களை இவருக்கு விற்றுவிட்டதாகக் கூறி, அங்கிருந்தவர்கள் அவரை ஒரு மதுபானக் கடை உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர். அங்கு காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை கட்டாயத் தொழிலாளியாக வேலை செய்ய வைக்கப்பட்டதோடு, பாலியல் தொழிலில் ஈடுபடக் கோரியும் அவர் கடுமையான உடல் மற்றும் மன ரீதியான சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்.
கடும் சித்ரவதைக்கு நடுவிலும் தைரியமாக செயல்பட்ட அந்தப் பெண், கடந்த ஜூன் 29 அன்று அந்த நபர்களிடமிருந்து எப்படியோ தப்பித்து, லிஸ்பன் மற்றும் மாட்ரிட் வழியாக தோஹா சென்று, அங்கிருந்து புதுடெல்லிக்கு பாதுகாப்பாக வந்து சேர்ந்தார். இந்தியா திரும்பிய பிறகும், அந்த மோசடி நிறுவனம் அவரிடம் மேலும் ரூ3 லட்சம் கேட்டு மிரட்டியதோடு, அவரது கணவருக்கும் கொலை மிரட்டல் விடுத்தது.
பாதிக்கப்பட்ட பெண் புனே குற்றப்பிரிவு போலீசாரை அணுகி புகார் அளித்தார். அதனடிப்படையில், புனேவைச் சேர்ந்த ஏஜெண்டுகள் மற்றும் போர்ச்சுக்கலில் இயங்கும் நபர்கள் உட்பட மொத்தம் 7 பேர் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவுகளின் கீழ் ஆள் கடத்தல், ஏமாற்றுதல், மிரட்டிப் பணம் பறித்தல் போன்ற குற்றங்களுக்காக புனே விமந்தல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.