காங்கிரசுடன் சமரச அரசியலில் ஈடுபடுவதாக கூறும் பா.ஜனதா தலைவர்களின் பெயரை பகிரங்கப்படுத்த வேண்டும்; பிரதாப் சிம்ஹாவுக்கு, சித்தராமையா சவால்

காங்கிரசுடன் சமரச அரசியலில் ஈடுபடும் பா.ஜனதா தலைவர்களின் பெயர்களை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று பிரதாப் சிம்ஹா எம்.பி.க்கு முதல்-மந்திரி சித்தராமையா சவால் விடுத்துள்ளார்.
காங்கிரசுடன் சமரச அரசியலில் ஈடுபடுவதாக கூறும் பா.ஜனதா தலைவர்களின் பெயரை பகிரங்கப்படுத்த வேண்டும்; பிரதாப் சிம்ஹாவுக்கு, சித்தராமையா சவால்
Published on

பெங்களூரு:

பிரதாப் சிம்ஹா குற்றச்சாட்டு

கர்நாடகத்தில் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைந்து, காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. இந்த நிலையில், கர்நாடகத்தில் பா.ஜனதா தலைவர்கள், காங்கிரஸ் தலைவர்களுடன் சேர்ந்து சமரச அரசியலில் ஈடுபடுவதாகவும், உள்ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாகவும் பா.ஜனதா எம்.பி.யான பிரதாப் சிம்ஹா பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார்.

இதுபோல், சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தோல்விக்கு காங்கிரசுடனான உள்ஒப்பந்தம் காரணம் என்று பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவியும் குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் புதிய சர்ச்சை மற்றும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து பெங்களூருவில் முதல்-மந்திரி சித்தராமையாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

நாங்கள் முடிவு செய்வோம்

பிரதாப் சிம்ஹா எம்.பி.க்கு இன்னும் அரசியல் பற்றி எதுவும் தெரியவில்லை. இதற்கு முன்பு பெங்களூரு-மைசூரு இடையிலான எக்ஸ்பிரஸ் சாலையை பா.ஜனதாவே செய்ததாக கூறி இருந்தார். பெங்களூரு சாலையை அமைக்க, அவர் இங்குள்ள எந்த தொகுதியில் எம்.பி.யாக இருந்தார். பிட்காயின் மற்றும் 40 சதவீத கமிஷன் விவகாரம் குறித்து விசாரணை நடத்தாமல் இருப்பது ஏன்? என்று கேட்க பிரதாப் சிம்ஹா யார்?. அவருக்கு என்ன சம்பந்தம் இருக்கிறது.

இதற்கு முன்பு பா.ஜனதா தான் மாநிலத்தில் ஆட்சியில் இருந்தது. அப்போது பிட்காயின், 40 சதவீத கமிஷன் குறித்து விசாரணை நடத்தும்படி, அவர்களது கட்சி தலைமையிடமோ, முதல்-மந்திரியிடமோ பிரதாப் சிம்ஹா எதற்காக சொல்லவில்லை. எந்த வழக்கு குறித்து எப்போது விசாரணை நடத்த வேண்டும், யார் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பது பற்றி நாங்கள் முடிவு செய்வோம். பிரதாப் சிம்ஹா சொல்ல வேண்டிய அவசியமில்லை.

பகிரங்கப்படுத்த தயாரா?

நான் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது எதிர்க்கட்சி தலைவர்கள் வீட்டிற்கு சென்று பேசியதில்லை. எதிர்க்கட்சி தலைவராக இருந்த போதும் யாருடைய வீட்டுக்கும் சென்றதில்லை. நான் முதல்-மந்திரியாக இருக்கும் போது என்னை வீட்டில் வந்து எதிர்க்கட்சி தலைவர்கள் சந்தித்து பேசி இருக்கின்றனர். அந்த சந்தர்ப்பத்தில் அரசியல் குறித்து பேசியதில்லை. அந்த சந்திப்பு எப்போதும் ஒரு மரியாதை நிமித்தமாகவே இருந்திருக்கிறது. நான், எதிர்க்கட்சி தலைவர்களை தொலைபேசியில் கூட தொடர்பு கொணடு பேசுவதில்லை.

எனது அரசியல் வாழ்க்கையில் யாருடனும் சமரச அரசியல் செய்து கொண்டதில்லை. எனவே பா.ஜனதா தலைவர்கள் யாருடன் சமரச அரசியல், உள்ஒப்பந்தம் செய்து கொண்டார்கள் என்பது பற்றி பிரதாப் சிம்ஹாவே பகிரங்கப்படுத்த வேண்டும். அவர் தான் குற்றச்சாட்டு கூறி இருக்கிறார். அவரது கட்சியின் தலைவர்கள் யார், காங்கிரஸ் தலைவர்களுடன் சமரசம் செய்து கொண்டுள்ளார்கள்? என்பதை பிரதாப் சிம்ஹா பகிரங்கப்படுத்த தயாரா?.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com