

சபாநாயகர் ராஜினாமா
இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பண்டாரா மாவட்டம், சகோலி தொகுதி எம்.எல்.ஏ. நானா படோலே சட்டசபை சபாநாயகராக பதவி வகித்து வந்தார்.
இந்தநிலையில் அவர் நேற்று சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை அவர் துணை சபாநாயகர் நர்காரி ஜிர்வாலிடம் ஒப்படைத்தார். சபாநாயகர் திடீர் ராஜினாமா பரபரப்பை ஏற்படுத்தியது.
காங்கிரஸ் மாநில தலைவர்
இந்தநிலையில் நானா படோலே மராட்டிய காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட உள்ளதாகவும், எனவே தான் அவர் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ததாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. அவர் மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விதர்பா மண்டலத்தை சேர்ந்த நானா படோலே குன்பி சமூகத்தில் செல்வாக்கு மிக்க தலைவராக உள்ளார். இவர் காங்கிரஸ் இருந்து பா.ஜனதாவுக்கு சென்று மீண்டும் காங்கிரசுக்கு வந்தவர் ஆவார்.
ஒருவருக்கு ஒரு பதவி
தற்போது மராட்டிய காங்கிரஸ் தலைவராக பாலசாகேப் தோரட் உள்ளார். அவர் வருவாய்துறை மந்திரியாக உள்ளதால் காங்கிரசில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் புதிய தலைவரை நியமிக்கும் பணியில் கட்சி மேலிடம் தீவிரம் காட்டி வந்தது. குறிப்பாக மும்பை மாநகராட்சி தேர்தலுக்கு முன் கட்சியை பலப்படுத்த கட்சி மேலிடம் முடிவு செய்து உள்ளது.எனவே இதுதொடர்பாக பாலசாகேப் தோரட் உள்ளிட்ட கட்சி மூத்த தலைவர்கள் சமீபத்தில் டெல்லியில் மேலிட தலைவர்களை சந்தித்து பேசியிருந்தனர். அப்போது மாநில தலைவராக நானா படோலேயை நியமிக்க முடிவாகி உள்ளது.
புதிய சபாநாயகர் யார்?
மேலும் நானா படோலே சபாநாயகா பதவியை ராஜினாமா செய்ய உள்ள தகவலை கட்சி மேலிடம் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரிடம் முன்கூட்டியே தொவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சரத்பவார் கூறும்போது, " நானா படோலே ராஜினாமா குறித்து காங்கிரஸ் எங்களிடம் முன்கூட்டியே தெரிவித்துவிட்டது. தற்போது புதிய சபாநாயகர் யார் என்பது குறித்து மகாவிகாஸ் கூட்டணி கட்சிகள் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கும்" என்றார்.
மகா விகாஸ் கூட்டணி ஒப்பந்தப்படி சபாநாயகர் பதவி காங்கிரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே அந்த கட்சியை சேர்ந்த ஒருவர் மார்ச் 1-ந் தேதி தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொருக்கு முன் சபாநாயகராக நியமிக்கப்பட உள்ளார்.