மணிப்பூர், அசாமில் ரூ.23.5 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்


மணிப்பூர், அசாமில் ரூ.23.5 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்
x

மணிப்பூரில் அசாம் ரைபிள்ஸ் படையினருடன் இணைந்து, வருவாய் நுண்ணறிவு இயக்குநரக அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இம்பால்,

வடகிழக்கு மாநிலங்களில் சமீப காலங்களாக போதை பொருட்கள் கடத்தல் என்பது அதிகரித்து காணப்படுகிறது. வங்காளதேச எல்லை வழியே அகதிகள் அத்துமீறி நுழைவது போன்று, ஆயுதம் மற்றும் போதை பொருட்கள் கடத்தலும் அதிகரித்து காணப்படுகின்றன.

இந்நிலையில், மணிப்பூர் மற்றும் அசாம் மாநிலங்களில் போதை பொருட்கள் கடத்தல் நடைபெறுகிறது என கிடைத்த தகவலை தொடர்ந்து, அசாம் ரைபிள்ஸ் படையினருடன் இணைந்து, வருவாய் நுண்ணறிவு இயக்குநரக அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர்.

இதில், மணிப்பூரின் நோனி என்ற பகுதியில் லாரி ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, நூதன முறையில் லாரியின் அடிப்பகுதியில் வெற்றிடம் அமைத்து, அதனை வெளியே தெரியாத வகையில், சிறப்பாக மறைத்து போதை பொருட்களை கடத்தி வந்துள்ளனர்.

இதன்படி, 569 கிராம் எடை கொண்ட ஹெராயின் மற்றும் 1,039 கிராம் எடை கொண்ட மெத்தம்பிடமைன் ரக போதை பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. கடந்த 21-ந்தேதி நடந்த இந்த சோதனையில் அசாம் ரைபிளின் 19-ம் பட்டாலியனை சேர்ந்த அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இதேபோன்று, 22-ந்தேதி சில்சார் பிரிவை சேர்ந்த அசாம் ரைபிள்ஸ் படையினருடன் இணைந்து வருவாய் நுண்ணறிவு இயக்குநரக அதிகாரிகள், அசாமின் ஹைலகண்டி மாவட்டத்தின் அலோய்செர்ரா நகரில் லாரி ஒன்றை வழிமறித்து சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, லாரியின் கீழ் பகுதியில் வெற்றிடம் ஏற்படுத்தி, அதில் 2,640.53 கிராம் எடை கொண்ட ஹெராயினை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது.

இதுபற்றி வெளியிடப்பட்ட ஊடக செய்தியில், சர்வதேச சந்தையில் ரூ.23.5 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. போதை பொருள் தடுப்பு பிரிவுக்கான சட்டம் 1985-ன் கீழ் அவற்றை பறிமுதல் செய்த போலீசார், 4 பேரை கைது செய்தனர்.

கடந்த ஜனவரியில் இருந்து இதுவரை கஞ்சா, மெத்தம்பிடமைன், ஹெராயின் என மொத்தம் ரூ.173 கோடி மதிப்பிலான ரக போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. 26 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

1 More update

Next Story