

புதுடெல்லி,
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை மூலம் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட தொழில் அதிபர் நிரவ் மோடி, கடந்த ஜனவரி மாதமே நாட்டை விட்டு வெளியேறினார். இந்த மோசடி தொடர்பாக நிரவ் மோடி, மனைவி அமி, சகோதரர் நிஷால், உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவை விட்டு வெளியேறிய இவர்கள் பல்வேறு நாடுகளில் வசித்து வந்தது கண்டறியப்பட்டது. இதில் மெகுல் சோக்சி ஆண்டிகுவாவில் குடியுரிமை பெற்று அங்கே வசித்து வருவது தெரியவந்தது. அவரை கைது செய்து ஒப்படைக்குமாறு மத்திய அரசு, ஆண்டிகுவாவுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளது.
இந்த மோசடியில் முக்கிய குற்றவாளியான நிரவ் மோடி, இங்கிலாந்தில் தலைமறைவாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்பட்டது. ஏனெனில் அவரது பாஸ்போர்ட்டு முடக்கப்பட்ட பின்னரும், அங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு அவர் சென்று வந்தது தெரியவந்தது. எனவே அவரை கைது செய்ய உதவுமாறு இங்கிலாந்திடம் கோரிக்கை விடப்பட்டது.
இந்தியாவின் கோரிக்கையை பரிசீலித்த இங்கிலாந்து, நிரவ் மோடி தங்கள் நாட்டிலேயே இருப்பதாக தற்போது தெரிவித்து உள்ளது. இதன் மூலம் அவர் இங்கிலாந்திலேயே தொடர்ந்து தலைமறைவாகி இருந்தது உறுதியாகி இருக்கிறது.
இங்கிலாந்தின் தகவலை தொடர்ந்து, நிரவ் மோடியை கைது செய்ய சி.பி.ஐ. தீவிரம் காட்டி வருகிறது. அவரை கைது செய்து ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் முறைப்படி கடிதம் அளித்துள்ளனர். இந்த கடிதம் வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் இங்கிலாந்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதைப்போல நிரவ் மோடிக்கு எதிராக சர்வதேச போலீஸ் (இன்டர்போல்) அதிகாரிகள் ஏற்கனவே ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட்டு இருப்பதன் அடிப்படையில், அவரை கைது செய்யுமாறு இங்கிலாந்து அதிகாரிகளையும் சி.பி.ஐ. கேட்டுக்கொண்டு உள்ளது.