

நாசிக்,
மராட்டியத்தின் நாசிக்கில், 'டாடா குழுமத்தின் கீழ் இயங்கும் டி.சி.எஸ்., நிறுவனத்தின் பி.பி.ஓ., அலுவலகம் உள்ளது. இங்கு பணிபுரியும் பெண்கள் மீது பாலியல் அத்துமீறல்கள் நடப்பதாக கடந்த பிப்ரவரியில் புகார் எழுந்தது. இதையடுத்து உண்மை நிலவரத்தை கண்டறிய நாசிக் போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வந்தனர். இதன்படி, அந்த அலுவலகத்திலேயே தூய்மை பணியாளர்களாக 4 பெண் போலீசார் உட்பட பலர் பணியில் சேர்ந்தனர்.
இந்த ரகசிய விசாரணையில், தென்கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவைச் சேர்ந்த இம்ரான் என்ற மதபோதகருடன் குற்றஞ்சாட்டப்பட்ட டி.சி.எஸ்., நிறுவன ஊழியர்கள் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் கைதான, 'டீம் லீடர்கள், சக ஊழியர்களை சிறுபான்மையினர் நடைமுறைகளை பின்பற்றும்படி தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்தது தெரியவந்தது. இதேபோல் குற்றஞ்சாட்டப்பட்ட மனித வள மேலாளரான நிதா கான் தலைமறைவானார்.
25 வயதான நிதா கான், 2021ல் டிசிஎஸ் நிறுவனத்தின் பிபிஓ பிரிவில் பணியில் சேர்ந்து இருக்கிறார். பாலியல் வன்கொடுமை மற்றும் கட்டாய மதமாற்றம் தொடர்பான புகார்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதில் நிதா கான் முக்கிய குற்றவாளி என்பது கண்டறியப்பட்டது.
இதன் பிறகு டிசிஎஸ் கம்பெனியில் இருந்து நிதா கான் இடை நீக்கம் செய்யப்பட்டார். 25 நாட்களாக தலைமறைவாக இருந்த நிதா கான் இன்று சத்ரபதி சம்பாஜி நகரில் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
யார் இந்த நிதா கான்
சாவித்ரிபாய் பூலே புனே பல்கலைக்கழகத்தில் பயின்ற நிதா கான், நாசிக் அலுவலகத்தில் ஊழியர்களின் குறைகளைத் தீர்ப்பதற்கும், பணியிட பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பொறுப்பான மேலாளராகப் பணியாற்றி வந்தார். குறிப்பாக, பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைத் தடுப்புச் சட்டத்தின் (POSH) கீழ் அமைக்கப்பட்ட உள் புகார் குழுவிலும் அவர் உறுப்பினராக இருந்துள்ளார். ஆனால், சக ஊழியர்களால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட பல பெண் ஊழியர்கள் அவரிடம் முறையிட்டபோது, அவர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் புகார்களைத் தள்ளுபடி செய்ததாகவோ அல்லது மறைக்க முயன்றதாகவோ குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தவிர, நிதா கான் மீது மேலும் சில கடுமையான புகார்கள் எழுந்துள்ளன. அங்கு பணிபுரிந்த இந்து பெண் ஊழியர்களை காதல் வலையில் விழ செய்து, பின்னர் அவர்களைக் கட்டாய மதமாற்றம் மற்றும் சுரண்டலுக்கு உள்ளாக்கிய விவகாரத்திலும் அவருக்குத் தொடர்பு இருப்பதாக டிஎன்ஏ செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. இதன் அடிப்படையில் அவர் மீது மிரட்டல் விடுத்தல், பெண்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் மும்பை நாக்கா மற்றும் தியோலாலி கேம்ப் காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரம் நாசிக்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.