நடராஜன், பாஸ்கரனுக்கு சரண் அடைவதில் இருந்து விலக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

சொகுசு கார் இறக்குமதி தொடர்பான வழக்கில் சசிகலா கணவர் நடராஜன் மற்றும் அவரது உறவினர் பாஸ்கரன் ஆகியோருக்கு சரண் அடைவதில் இருந்து விலக்கு அளித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
நடராஜன், பாஸ்கரனுக்கு சரண் அடைவதில் இருந்து விலக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Published on

புதுடெல்லி,

போலி ஆவணங்களை பயன்படுத்தி 1994-ம் ஆண்டு லண்டனில் இருந்து லெக்சஸ் என்ற சொகுசு காரை இறக்குமதி செய்ததாகவும், இதனால் ரூ.1 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், சசிகலா கணவர் நடராஜன், பாஸ்கரன், லண்டனை சேர்ந்த பாலகிருஷ்ணன், யோகேஸ் பாலகிருஷ்ணன் உள்பட பலர் மீது சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு, நடராஜன் உள்பட 4 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த 2010-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், நடராஜன் உள்பட தண்டனை பெற்றவர்கள் மேல்முறையீடு செய்தனர்.

சரண் அடைவதில் இருந்து விலக்கு

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, சிறப்பு நீதிமன்றம் விதித்த 2 ஆண்டுகள் சிறை தண்டனையை, கடந்த மாதம் (நவம்பர்) 17-ந் தேதி உறுதிப்படுத்தியதுடன், நடராஜன், பாஸ்கரன் ஆகியோரை சரண் அடையுமாறு உத்தரவிட்டது.

சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து நட ராஜன், பாஸ்கரன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தீபக் குப்தா, பாஸ்கரன், நடராஜன் ஆகியோருக்கு சரண் அடைவதில் இருந்து விலக்கு அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார். நீதிமன்றம் அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை 2 பேரும் சரண் அடையத் தேவை இல்லை என்றும் கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com