தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு ஏப்ரலில் தொடங்குகிறது - மத்திய அரசு அறிவிப்பு

நாடு முழுவதும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்குகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு ஏப்ரலில் தொடங்குகிறது - மத்திய அரசு அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

மத்திய அரசிதழில் கடந்த 31-ந் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதுபற்றி மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

அசாம் தவிர்த்து நாடு முழுவதும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரை தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்குகிறது. அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பட்டியல் தயாரிக்கும் பணி ஏற்கனவே நடைபெற்று, கடந்த ஆண்டு ஜூலை மாதம் வரைவு பட்டியல் வெளியானது. இதில் 40 லட்சம் பேர் விடுபட்டதாக பெரிய சர்ச்சை எழுந்தது.

இந்த தேசிய கணக்கெடுப்பில் சுமார் 31 லட்சம் பயிற்சி பெற்ற கணக்கெடுப்பாளர்கள் வீடு, வீடாக சென்று தகவல் சேகரிப்பார்கள். இவர்களில் பெரும்பாலானோர் ஆசிரியர்களாக இருப்பார்கள். இந்திய பதிவாளர் ஜெனரல் தேவைக்கு ஏற்ப மின்னணு வடிவில் விண்ணப்பம் தயாரிக்கப்பட்டு அதில் தகவல்களை பதிவு செய்வார்கள்.

இந்த பணி மூன்று கட்டங்களாக நடைபெறும். இதில் முதல் முறையாக மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகள் கணக்கெடுப்பு பட்டியலில் சேர்க்கப்படுகிறார்கள். சுமார் 45 ஆயிரம் கிராமங்களில் இணையதள வசதி இல்லை. அதுபற்றிய தகவலும் தனியாக சேகரிக்கப்படும். சட்டப்படி ஒவ்வொரு குடிமகனும் இந்த கணக்கெடுப்பில் இடம்பெற வேண்டும்.

கிராமம், துணை நகரம், துணை மாவட்டம், மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் மக்கள் தொகை பட்டியல் தயாரிக்கப்படும். இந்த பட்டியல் தயாரிக்கும் பணி முடிவடைந்ததும் வெளியிடப்படும். இது இந்திய குடிமக்கள் தேசிய பட்டியல் தயாரிப்பதற்கு அடிப்படையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்த பணிகளும் மின்னணு அடிப்படையில் நடத்தப்பட்டு, தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு மக்கள் தொகை பட்டியல் 2024-2025-ம் ஆண்டில் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com