

புதுடெல்லி,
காங்கிரசின் 135-வது நிறுவன தினத்தையொட்டி, டெல்லியில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நேற்று கொடியேற்று விழா நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு மத்தியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, நிருபர்களிடம பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிப்பு என்பது இரண்டாவது ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை என்றே சொல்லலாம்.
இது ரூபாய் நோட்டு மதிப்பிழப்பை விட மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்துவதாக அமையும். ரூபாய் நோட்டு மதிப்பிழப்பை விட இரு மடங்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்த நடவடிக்கைகளின்போது அவரது (மோடி) 15 நண்பர்கள் எந்த ஆவணத்தையும் காட்ட வேண்டியது இல்லை.
மேலும் இதில் உருவாக்கப்படும் பணம், அந்த 15 பேரின் பைகளுக்கு செல்லும்.
பாரதீய ஜனதா கட்சி என்னை பொய்யர் என கூறுவது பற்றி கேட்கிறீர்கள்.
நீங்கள் எனது டுவிட்டர் பதிவை பார்க்க முடியும். பிரதமர் நரேந்திரமோடியின் பேச்சையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதில் அவர் இந்தியாவில் தடுப்பு காவல் மையங்கள் இல்லை என்று சொன்னார். ஆனால் எனது டுவிட்டர் பதிவுடன் இணைக்கப்பட்டிருந்த வீடியோ காட்சியில் இங்கே தடுப்பு காவல் மையம் இருப்பதை நீங்கள் பார்க்க முடியும். இப்போது, பொய் சொல்வது யார் என்பதை நீங்களே தீர்மானியுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.