

புதுடெல்லி,
சென்னையைச் சேர்ந்த ஏ.பாலசுப்பிரமணியன் என்பவர், நீட் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு அளிக்கப்படும் வயது வரம்பு உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் பொறியியல் படிப்புக்கான ஜே.இ.இ. மெயின் நுழைவுத்தேர்வு மற்றும் ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வுக்கும் அளிக்கப்பட வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு, மனுதாரர் மற்றும் மாணவர்களின் வசதிக்காக தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தை ஒரு வாரத்துக்கு திறந்து வைத்திருக்க வேண்டும் என்று கடந்த ஜனவரி 21-ந் தேதி உத்தரவிட்டது.
ஆனால், அதனை தேசிய தேர்வு முகமை செயல்படுத்தவில்லை. இதனால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க இயலாமல் போனது. இதனால் மனுதாரரான சென்னை மருத்துவர் பாலசுப்ரமணியன் சுப்ரீம் கோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான விடுமுறை அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல்கள் ஆர்.வெங்கட்ராமன், மனோஜ் செல்வராஜ் ஆகியோர் ஆஜரானார்கள். விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள் தேசிய தேர்வு முகமை தலைவர் பேராசிரியர் ஆனந்த் மற்றும் ரூர்க்கி ஐ.ஐ.டி. இயக்குனர் அஜித்குமார் சதூர்வேதி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். ஜூன் 10-ந் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.