தேசிய திரைப்பட விருது பெற்ற தனுஷ், விஜய் சேதுபதி, இமான், வெற்றி மாறன்!

67ஆவது தேசிய திரைப்பட விருதுகள் தனுஷ், விஜய் சேதுபதி, இமான், வெற்றி மாறன், பார்த்திபன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
தேசிய திரைப்பட விருது பெற்ற தனுஷ், விஜய் சேதுபதி, இமான், வெற்றி மாறன்!
Published on

புதுடெல்லி,

டெல்லியில் 67ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று தொடங்கியது. விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை மந்திரி அனுராக் தாக்கூர், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணைமந்திரி எல். முருகன் மற்றும் விருது பெறுவோர்கள் கலந்துகொண்டனர். காலை 11 மணிக்கு தொடங்கிய விருது வழங்கும் விழாவில் மொழிவாரியாக விருதுகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில் அசுரன் படத்துக்காக தேசிய விருதை தயாரிப்பாளர் தாணு மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். அவர்களுக்கு துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு விருது வழங்கினார். வெற்றிமாறன் தேசிய விருது பெறுவது இரண்டாவது முறையாகும். அசுரன் படம் பூமணி எழுதிய வெக்கை நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் தனுசுக்கு வழங்கப்பட்டது. அசுரன் படத்துக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. தனுஷ் தேசிய விருது பெறுவது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே ஆடுகளம் படத்திற்கு தேசிய விருது பெற்றிருந்தார்.

இதனையடுத்து சிறந்த துணை நடிகருக்கான விருதை விஜய் சேதுபதி பெற்றார். சூப்பர் டீலக்ஸ் படத்துக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.

மேலும் கண்ணான கண்ணே… (விஸ்வாசம்) பாடலுக்காக டி.இமான் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதையும், நடிகர் ஆர்.பார்த்திபன், ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்காக சிறந்த ஜூரி விருதையும், கேடி (எ) கருப்பு துரை என்ற தமிழ் படத்தில் நடித்த நாகவிஷால் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதையும் பெற்றுக் கொண்டனர்.

இதைப்போல போன்ஸ்லே என்கிற இந்தி படத்தில் சிறப்பான நடிப்புக்காக நடிகர் மனோஜ் பாஜ்பாய், மணிகர்னிகா தி குயின் ஆப் ஜான்சி மற்றும் பங்கா ஆகிய இந்தி படங்களில் சிறப்பாக நடித்ததற்காக நடிகை கங்கனா ரனாவத் ஆகியோரும் தேசிய விருது பெற்றனர். இதில் சிறந்த படத்துக்கான தேசிய விருது, மரைக்காயர் அரபிக்கடலின்டே சிம்கம் என்ற படத்துக்கு வழங்கப்பட்டது.

இதனிடையே நிகழ்ச்சியில் பேசிய இணைமந்திரி எல். முருகன், ராமரை நேரடியாக கண்முன்னே நிறுத்தியவர் நடிகர் என்.டி.ராமாராவ். திரையுலக ஜாம்பவான்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோர் தமிழ் மக்களின் வாழ்வியலோடு கலந்தவர்கள் என்று புகழாரம் சூட்டினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com